முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்பாட்சா சாவு குறித்து விசாரிக்க மருத்துவர்கள் குழு

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 2 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக்பாட்சாவின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்த அதாவது சாதிக்பாட்சா எந்தச் சூழ்நிலையில் மரணமடைந்தார் என்பது குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து மருத்துவர்கள் குழு ஒன்று சென்னைக்கு வருகிறது. டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த(எய்ம்ஸ்) டாக்டர்கள் குழு ஒன்று சென்னைக்கு விரைவில் வருகிறது. இந்த குழுவினரை மத்திய புலனாய்வுத் துறை அனுப்பிவைக்கிறது. சாதிக்பாட்சாவின் சாவில் மர்மம் இருப்பதாக சி.பி.ஐ. கண்டறிந்ததை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி லஞ்சப்பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியும் கைது செய்யப்பட்டு அதே திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான 38 வயதான சாதிக்பாட்சாவிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்ரூவராக மாற சாதிக்பாட்சா திட்டமிட்டிருந்தாராம். அதைத் தொடர்ந்து டெல்லி செல்லவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த அதேநாளில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கடந்த மார்ச் 16 ம் தேதி சாதிக்பாட்சா மர்மமான முறையில் இறந்துகிடந்தார். சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி தெரிவித்தார். சி.பி.ஐ. விசாரணையின் நெருக்கடி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பின்னாளில் எழுந்தது. அதற்கு சில காரணங்களும் கூறப்பட்டன. கொல்லப்பட்டதாக கருதப்படும்  சாதிக்பாட்சா முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து லஞ்ச விவரங்கள் தொடர்பான அனைத்து ரகசியங்களையும் அறிந்தவர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும் மற்றும் பலருக்கும் லஞ்சம் கொடுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியும் அவருக்கு தெரியுமாம். எனவே இவர் அப்ரூவராக மாறிவிட்டால் அனைத்து விஷயங்களும் அம்பலமாகிவிடும். பிறகு கம்பி எண்ண வேண்டிவரும் என்பதை உணர்ந்து அவரை கொலை செய்திருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகிக்கிறது. மேலும் சாதிக்பாட்சா மரணமடைந்த காலகட்டமும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது. அந்த காலகட்டத்தில்தான் சாதிக்பாட்சா இறந்திருக்கிறார். மேலும் அப்ரூவராக மாறவும் அவர் திட்டமிட்ட நேரமும் அதுதான். அதற்காக டெல்லி புறப்பட்ட நாளன்றுதான் அவர் மரணமும் அடைந்திருக்கிறார். மேலும் அவர் இறந்து 7 மணி நேரம் கழித்தபிறகுதான் தற்கொலை கடிதம் என்ற ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் ராசாவும் அவரது மனைவியும் நல்லவர்கள் என்று சர்ட்டிபிகேட் வேறு தரப்பட்டுள்ளதாம். 7 மணி நேரம் கழித்து கைப்பற்றப்பட்ட இந்த கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதால் சி.பி.ஐ.யின் சந்தேகம் வலுத்துள்ளது. எனவே சாதிக்பாட்சா கொல்லப்பட்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது. அதற்கான ஆதாரங்களும் அதற்கு கிடைத்துள்ளன. அதனால்தான் சாதிக்பாட்சாவின் மர்மச் சாவு குறித்து விசாரிக்க அதாவது எந்த சூழலில் அவர் இறந்தார் என்பது குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து டாக்டர்கள் குழுவை அனுப்ப சி.பி.ஐ. முடிவு செய்துவிட்டது. 

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் குழு ஒன்று இதற்காக வெகு விரைவில் சென்னைக்கு வருகிறது. இந்த குழுவினர் சாதிக்பாட்சா உடல் புதைக்கப்பட்ட கல்லறையை தோண்டி அவரது உடலை எடுத்து உடலின் பல்வேறு பாகங்களில் பலவிதமான சோதனைகளை நடத்த உள்ளனர் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாதிக்பாட்சாவின் மர்மச் சாவு குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 வது பிரிவின் கீழ் ஏற்கனவே மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையை துவக்கிவிட்டது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது. 

முன்னதாக சாதிக்பாட்சா மரணமடைந்தபோது தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் பலவிதமான சந்தேகங்களை எழுப்பின. சாதிக்பாட்சாவின் சாவில் மர்மம் உள்ளது என்று அப்போதைய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து அப்போதிருந்த மாநில அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடிவு செய்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை நடந்துவருகிறது. மரணமடைந்த சாதிக்பாட்சா ஒரு தொழிலதிபர் மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரும் கூட. இவருக்கு சென்னையிலும், பெரம்பலூர் போன்ற இடங்களிலும் பல நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பலவிதமான அதிரடி சோதனைகளை நடத்தினார்கள். அதன்பிறகுதான் அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அந்த காலக்கட்த்தில்தான் சாதிக்பாட்சா மரணத்தை தழுவ நேர்ந்தது. இது கொலையா? அல்லது தற்கொலையா ? என்பது டெல்லியில் இருந்து டாக்டர்கள் குழு வந்தபிறகு அனைத்து விவரங்களும் வெளிச்சத்துக்கு வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்