முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தியை ஹசாரே இன்று சந்தித்து பேசுகிறார்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுலை 2 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து சில விளக்கங்களை அன்னா ஹசாரே அளிக்க இருக்கிறார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மசோதாவுக்கான நகல் திட்டம் தயாரிப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 10 பேர் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் அரசு பிரதிநிதிகளும் அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த கூட்டுக்குழுவில் லோக்பால் மசோதா குறித்து ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை. லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோரை கொண்டுவர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரணாப் முகர்ஜி போன்ற மத்திய அரசு பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லோக்பால் மசோதாவை விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்து அன்னா ஹசாரே கேட்டுக்கொண்டுள்ளார். மூத்த பா.ஜ.க. தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களிடம் அன்னா ஹசாரே லோக்பால் குறித்து விவாதித்தார். இதனிடையே இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அன்னா ஹசாரே சந்திக்க இருக்கிறார். அப்போது சமூக ஆர்வலர்களின் நிலை குறித்து அவர் சோனியா காந்தியிடம் விளக்கி கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சோனியாகாந்தியை இன்று பிற்பகல் 4 மணிக்கு அன்னா ஹசாரே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறியுள்ளன. லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோரை கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சோனியாகாந்தியை தான் சந்திக்க இருப்பதாக அன்னா ஹசாரே ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கும் அன்னா ஹசாரே குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சோனியா காந்தியை அன்னா ஹசாரே விரைவில் சந்திப்பார் என்பதை காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் ஏற்கனவே உறுதி செய்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் லோக்பால் மசோதா குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்