முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாக்கரேவின் சொத்துக்களை முடக்க உத்தரவு

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

மும்பை,ஜூலை.2 - சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் சொத்துக்களை முடக்க பீகார் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. பால்தாக்கரே தனது கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் கடந்த 2008 ல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். இந்த கட்டுரை பீகார் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக ராஜேஷ்குமார் சிங் என்ற வழக்கறிஞர் பீகார் மாநில அரா சப்டிவிசனல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராகும்படி தாக்கரேவுக்கு பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. எனவே தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிபதி திரிபாதி கடந்த 27 ம் தேதி உத்தரவிட்டார். 

இது குறித்து கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் பால்தாக்கரே தெரிவித்திருப்பதாவது, என்னுடைய உண்மையான சொத்து சிவசேனாவின் லட்சக்கணக்கான தொண்டர்களும், மராட்டிய மக்களுமே ஆவர். இவர்களே எந்த பிரச்சினைக்கும் என்னுடைய அழைப்பை ஏற்று போராடுபவர்கள். இவர்களை யாராலும் முடக்க முடியுமா? அப்படி உத்தரவிடும் நீதிமன்றமும், சட்டமும் இனிமேல்தான் உருவாக்கப்பட வேண்டும். துறவி சாய்பாபாவுக்கு பக்தர்கள் தங்க கிரீடமும், தங்க சிம்மாசனமும் அளித்தார்கள். என்னுடைய வாழ்க்கையும் அந்த துறவியின் வாழ்க்கையை போன்றதே.

என்னாலும் நிறைய பணம் வாங்க முடியும். ஆனால் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்வதற்காக அல்ல. அந்த பணத்தை ஏழைகளுக்கு உதவி செய்ய பயன்படுத்துவேன். எனது தந்தை பிரபோதாங்கர் தாக்கரேவின் இல்லத்தில் அவரை பார்க்க நிறைய பார்வையாளர்கள் வருவார்கள். வீட்டின் வெளியில் கழற்றி விடப்படும் பார்வையாளர்களுடைய காலணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதுதான் உண்மையான சொத்து. 

இப்போது அப்படிப்பட்ட சொத்துக்களை யாராவது முடக்க வந்தார்களேயானால் அந்த சொத்துக்களாலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும். 

இதற்கிடையில் சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரெனட், தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்த நூற்றாண்டின் நகைச்சுவையாகும் என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்