முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் விவகாரம்: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.3 - லோக்பால் வரைவு மசோதா குறித்து கருத்தொற்றுமையை ஏற்படுத்த இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதாவும் கலந்துகொள்ளும் என்று அதன் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அறிவித்துள்ளார். 

நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. இதை ஒழிக்கக்கோரி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காந்தீயவாதி அண்ணாஹசாரே சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதனால் பயந்துபோன மத்திய அரசு, ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற உறுதி அளித்தது. இதனையொட்டி லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் அரசு தரப்பில் 5 பேரும் சிவில் பிரிவில் அண்ணா ஹசாரே தலைமையில் 5 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த இரண்டு பிரிவினரும் மசோதாவில் சேர்க்க வேண்டிய அம்சங்களை சேர்த்தன. லோக்பால் மசோதாவுக்கு பிரதமர், நீதிபதிகள், அதிகாரிகளையும் விசாரிக்கும் அதிகாரம் வேண்டும் என்று சிவில் பிரிவு உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு பிரதிநிதிகளும் சிவில் பிரிவு உறுப்பினர்களும் 9 தடவைகள் சந்தித்து பேசினர். அப்போதும் இருதரப்பினர்களுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. 

இந்தநிலையில் வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்குவேன் என்று அண்ணா ஹசாரே அறிவித்தார். மேலும் லோக்பால் வரைவு மசோதாவில் தாம் சேர்த்துள்ள அம்சங்களுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு தரக்கோரி பாரதிய ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மாசுவராஜ், நிதீன்கட்காரி, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவர் அஜீத்சிங், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து அண்ணாஹசாரே சந்தித்து பேசினார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அண்ணா ஹசாரே நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது லோக்பால் மசோதாவுக்கு தாம் சேர்த்துள்ள அம்சங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் அண்ணா ஹசாரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சோனியா காந்தியை சந்தித்து,பிரதமர், நீதிபதிகள் அதிகாரிகள் ஆகியோர்களை லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகளை கலந்தாலோசனை செய்துவிட்டு முடிவு சொல்வதாக சோனியா காந்தி பதில் கூறினார். லோக்பால் மசோதாவுக்காக அரசு தரப்பிலும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சிவில் உறுப்பினர்களாக உள்ள நாங்களும் அம்சங்களை உருவாக்கி உள்ளோம்.இவை இரண்டையும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதித்து தேவையானவைகளை எடுத்துக்கொள்ளட்டும் என்று அண்ணா ஹசாரே கூறினார். 

இதற்கிடையில் லோக்பால் வரைவு மசோதா குறித்து கருத்துக்களை அறிந்து கருத்தொற்றுமையை ஏற்படுத்த சர்வகட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடக்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதாவும் கலந்துகொள்ளும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கலந்துகொள்ளுமா, கலந்துகொள்ளாதா என்ற சந்தேகம் இருந்தது. அத்வானியின் இந்த அறிவிப்பின் மூலம் இந்த சந்தேகம் நீக்கப்பட்டுவிட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டு லோக்பால் மசோதா குறித்த கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை முன்வைக்கப்படும் என்றும் அத்வானி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!