முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்பாட்சா உடல் மறு பரிசோதனை செய்ய கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 - சாதிக்பாட்சா சாவில் மர்மம் நீடிப்பதால் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுபற்றி செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை குடும்ப ஆட்சி, பண பலம் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்ட ஆட்சிக்கு முற்றுபுள்ளி அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற செய்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வரும் செப்டம்பர் - 6-ம் தேதியன்று புதிய தமிழகம் சார்பில் நன்றி தெரிவிக்கும் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீரை திருடும் மாஃபிய கும்பல் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குடிநீர் தண்ணீரை லாரி மூலம் கடத்துவதால் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது.

விவசாயம், குடிநீர் தவிர வேறு காரியங்களுக்கு தனிப்பட்ட முறையில் மாஃபியா கும்பல் தண்ணீரை திருடுகிறது. இதுபற்றி தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அவசர சட்டம் கொண்டு வந்து முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி மேயர் நேரடியாக மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது போல் நகராட்சி, ஒன்றிய தலைவர்களும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 3 சதவித உள் ஒதுக்கீடு அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். மதுரை உட்பட பல மாவட்டங்களில் தீண்டாமை உள்ளது. இரட்டை குவளை முறை உள்ளது. லோக்பால் மசோதாவில் யாருக்கும் விதி விலக்கு கொடுக்கக்கூடாது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா எதிர்ப்பின் காரணமாக பதவி விலகினார். அதற்கு ஈடான ஊழல் விவகாரம் தயாநிதி மாறன் விஷயத்தில் உள்ளதால் தயாநிதிமாறன் உடனடியாக பதவி விலக வேண்டும். தயாநிதி மாறன் பதவி விலகி வழக்கை சந்திக்க வேண்டும். சாதிக்பாட்சாவின் மரணத்தில் மர்மங்கள் நீடிப்பதால் அவரது உடலை மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்