முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கு: இன்று மீண்டும் விசாரணை துவக்கம் ராசா, கனிமொழி ஆஜர்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 4 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் விசாரணை துவங்குகிறது. முன்னாள் அமைச்சர் ராசா, தி.மு.க எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வா, மற்றும் 11 பேரும் இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி முன்னிலையில் ஆஜராகிறார்கள். அப்போது வாத, பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா முதலில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு கலைஞர் தொலைக்காட்சி ரூ. 214 கோடி லஞ்சப் பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், அக்கட்சியின் எம்.பியுமான கனிமொழியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தயாளு அம்மாள் மற்றும் கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் கலைஞர் டி.வியின் பங்குதாரர்களான கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்கள் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை சி.பி.ஐ. கோர்ட் முதலில் நிராகரித்தது. பிறகு இவர்கள் டெல்லி ஐகோர்ட்டை அணுகினார்கள். ஆனால் இவர்களை ஜாமீனில் விடக் கூடாது. அப்படி விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார்கள் என்று சி.பி.ஐ. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து டெல்லி ஐகோர்ட்டிலும் கனிமொழி, சரத்குமார் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக இவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கும் சென்றார்கள். அங்கும் இவர்களது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. குற்றச்சாட்டுக்களை பதிவு செய்த பிறகு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யுங்கள் என்று இவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவுரை கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் கோடை விடுமுறையை ஒட்டி இந்த வழக்கு விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதாவது கடந்த ஜூன் 10 ம் தேதியன்று இந்த வழக்கில் கடைசியாக விசாரணை நடந்தது. இப்போது கோடை விடுமுறைக்கு பிறகு சர்ச்சைக்குரிய இந்த ஊழல் வழக்கில் இன்று முதல் மீண்டும் விசாரணை தொடங்கவிருக்கிறது.
இந்த வழக்கில் கைதாகி உள்ள ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் புரோமோட்டர் சாஹித் உஸ்மான் பல்வா மற்றும் 11 பேரும் இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் ஆஜராகிறார்கள். இந்த வழக்கை பிரத்யேகமாக கவனித்து வருபவர்தான் சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி. ஷைனி. இவரது முன்னிலையில் இன்று அனைவரும் ஆஜராகிறார்கள். இன்று சர்க்கார் தரப்பு வழக்கறிஞரும், எதிர் தரப்பு வழக்கறிஞரும் தங்களது வாத பிரதிவாதங்களை எடுத்து வைப்பார்கள். நேற்று வரை ஆவணங்கள் அனைத்தையும் சரி பார்க்கும் பணி நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இதுவரை சி.பி.ஐ. 2 குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.
அதில் 14 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 3 வது குற்றப்பத்திரிக்கை இந்த மாதம் 2 வது வாரத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. அந்த குற்றப்பத்திரிக்கையில் தயாநிதி மாறன் பெயரும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், செல்போன் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டது, பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் தயாநிதி மாறன் மீது கூறப்பட்டுள்ளன. ஆனால் அவர் அதை மறுத்துள்ளார். பிரதமரையும் சந்தித்து இது குறித்து விளக்கமளித்தாராம். ஆனால் பிரதமர் அதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று பிரதமர் கேட்டுக் கொண்டாராம். அதற்கு தயாநிதி மாறன், நான் நிரபராதி. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டாராம். இருப்பினும் விரைவில் நடக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் போது தயாநிதி மாறன் பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில்தான் இன்று 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரணை தொடங்குகிறது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 2 ம் தேதி முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராசா, பல்வா, சித்தார்த்த பெகுரா, ஆர்.கே. சந்தோலியா, சஞ்சய் சந்திரா, டி.பி. ரியாலிட்டி பிரமோட்டர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது குற்றப்பத்திரிக்கையிலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago