முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ராணுவம் சுட்டதில் சிறுவன் பலி ஜெயலலிதா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 4 - சென்னையில் மரத்தில் ஏற முயன்ற 13 வயது சிறுவனை ராணுவ வீரர் சுட்டதில் பலியானான். இச்சம்பத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்துபோன சிறுவன் குடும்பத்தினருக்கு ரூ, 5லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதா, சிறுவனை சுட்ட ராணுவ வீரரை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கும்படி ராணுவ கமாண்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தீவு திடல் அருகில் உள்ள இந்திராகாந்தி நகரை சேர்நதவர் குமார்.  கூலிதொழிலாளி. இவருக்கு தில்சன் என்ற 13 வயது மதிக்கத்தக்க மகன் உள்ளான்.  இந்திராகாந்தி நகரை ஒட்டி தென்பிராந்திய  ராணுவ கமாண்டர் அலுவலக வளாகம் உள்ளது.  ராணுவ பாதுகாப்புடன் உள்ள  இந்த வளாகத்தில் வெளியாட்கள் நுழைய அனுமதியில்லை.  ஆனாலும் பள்ளி செல்லும் சிறுவர்கள்  வளாகத்திற்குள் நுழைந்து கீழே கிடக்கும் மாங்காய்கள், பதாம் கொட்டைகளை பொறுக்குவது வழக்கம். ராணுவ வீரர்கள் அவர்களை விரட்டியடிப்பது வழக்கம். இந்நிலையில்  சிறுவன் தில்சன் நேற்று மதியம் 1.30 மணியளவில் கொடிமரச்சாலையில் அமைந்துள்ள ராணுவ வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி பாதம் கொட்டை எடுக்கச்சென்றான். அப்போது அங்கிருந்த ராணுவ வீரர் அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவனது தலையில குண்டு  பாய்ந்து பலத்த காயத்துடன் கீழே விழுந்து விட்டான். உடனடியாக  சிறுவனை அருகில் உள்ளவர்கள் அரசு பொது மருத்து வமனையில் அனுமதித்தனர்.  இச்சம்பவம் பற்றி அறிந்த முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயக்குமார் ஆகியோரை உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பி சிறுவனுக்கு தேவையான சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றும்படி அனுப்பிவைத்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இச்சம்பவத்தினால்  ஆதிரமடைந்த  அப்பகுதி பொதுமக்கள்  அங்கிருந்த ராணுவ  வாகனங்களை அடித்து நொறுக்கி  சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு  போலீஸ் கமிஷனர் திரிபாதி விரைந்து வந்த  பொதுமக்களை சமாதானப்படுத்தினார்.  இதனிடையே  இச்சம்பவத்தை முதல்வர் ஜெயலலிதா கடுமையா கண்டித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:​
சென்னை தீவுதிடல்  அருகில் உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த கூலித்தொழிளாலி குமார் என்பவரின் மகன் தில்சன் நேற்று பிற்பகலில் கொடிமரசாலை, ராணுவ வளாகத்தில் அமைந்துள்ள  மரத்தில் ஏற முயற்சித்த போது அங்குள்ள ராணுவ காவலாளி ஒருவர் அந்த சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டதின் விளைவாக அச்சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து,  உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்த துயர சம்பவத்தை    கேள்விப்பட்டவுடன்  அமைச்சர்கள் செங்கோட்டையன்,  நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயக்குமார் ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த சிறுவனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க பெறுவதை உறுதி செய்யுமாறு ஆணையிட்டேன்.  எனினும் சிகிச்சை பலனின்றி செல்வன் தில்சன் மரணமடைந்தான் என்ற செய்தி எண்ணை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியது.
 மரத்தில் ஏற முயன்ற  13 வயது சிறுவன்  தீவிரவாதியோ, பயங்கரவாதியோ அல்ல என்பதை பாதுகாவலர் எளிதில் தெரிநது கொண்டிருக்க முடியும். இருப்பினும் அந்த சிறுவன் மீது தூப்பாக்கி சூடு நடத்தியிருப்பது வன்னையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியதாது. எனது ஆணையின் பேரில் தமிழக அரசின் தலைமை செயலர், ராணுவ ஜெனரல் காமாண்டர் அதிகாரிக்கு  கடிதம் எழுதி இந்த கொடூரச் செயலை செய்த ராணுவ வீரர் உடனடியாக தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளேன். அந்த ராணுவ வீரர் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்டுவதை நான் உறுதிசெய்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ள இந்தத் துயரமான சூழ்நிலையில் பொதுமக்கள்  அமைதி காத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
செல்வன் தில்சனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களையும் ,அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்வதோடு,  அன்னாரது குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ருபாய் உதவித்தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்