முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது நல்ல வாய்ப்பை இழந்தோம் தோனி வருத்தம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

பிரிட்ஜ்டவுன், ஜூலை - 4 - இந்தியா- மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இயற்கை ஒத்துழைக்காததால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது என்று இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கவலை தெரிவித்தார். இந்தியா-மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி பார்படாஸின் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்க்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 11 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் பொறுப்பாக விளையாடியதால் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. இதனால் 4 ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது. 

வி.வி.எஸ்.லக்ஷ்மன் 72 ரன்களுடனும், விராட் கோஹ்லி 26 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் விராட் கோஹ்லி ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். கூடுதலாக ஒரு ரன்னை மட்டுமே சேர்த்த கோஹ்லி, எட்வர்ட்சின் பந்துவீச்சில் சம்மியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார்.  அடுத்ததாக சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இந்நிலையில் நன்கு விளையாடிவந்த லக்ஷ்மனும் 87 ரன்கள் எடுத்த நிலையில் எட்வர்ட்சின் பந்தில் சம்மியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 247 ஆக இருந்தது. தொடர்ந்து அணித் தலைவர் தோனி களமிறங்கினார். இவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. தன் பங்கிற்கு 5 ரன்களை மட்டும் சேர்த்த தோனி, எட்வர்ட்சின் பந்தில் சந்தர்பாலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து வந்த ஹர்பஜன்சிங் அவுட்டாகாமல் 6 ரன்களையும், ரெய்னா ஆட்டமிழக்காமல் 12 ரன்களையும்  எடுத்திருந்தநிலையில் இந்திய அணியின் டிக்ளேர் அறிவிப்பை மிகத் துணிச்சலாக  செய்தார் தோனி. அப்போது, அணியின் எண்ணிக்கை 6 விக்கெட் இழப்பிற்கு 269 ஆக இருந்தது.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 83 ஓவர்களில்  281 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி வைத்தது. இதையடுத்து மேற்கு இந்திய தீவுகளின் இரண்டாவது இன்னிங்சை பரத்தும், சிம்மன்சும் துவக்கினர். முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா இந்த இன்னிங்சிலும் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் சிம்மன்சின் விக்கெட்டை பறித்தார். சிம்மன்ஸ் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய சர்வானும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 8 ரன்களே எடுத்த நிலையில் குமாரின் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து டேரன் பிராவோ களமிறங்கினார். மே.இ. தீவுகள் அணி 55 ரன்கள் எடுத்த நிலையில் துவக்க வீரர் பரத்தை 27 ரன்களில் வெளியேற்றினார் இஷாந்த் சர்மா. அடுத்து சந்தர்பால் பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். சந்தர்பால் ரன் எடுக்காவிட்டாலும் இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தார். இவர் அதிக பந்துகளை வீணாக்கினார். ஆனால் பிராவோ ஓரளவு அடித்து ஆடி ரன்களை சேர்த்தார். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 109 ஆக இருந்தபோது சந்தர்பால் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். இவர் 87 பந்துகளை ஏப்பம் விட்டபிறகே இந்த 12 ரன்களை எடுத்தார்.  ஆனாலும் டி.வி. ரீப்ளேயில் சந்தர்பால் அவுட் இல்லை என்பது தெரியவந்தது. அடுத்து சாமுவேல்ஸ், பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். சாமுவேல்ஸ் 9 ரன்கள் மட்டும் எடுத்து சர்மாவின் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 53.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களாக இருந்தது.  அடுத்து களமிறங்கிய மே.இ. தீவுகளின் விக்கெட் கீப்பர் பாவ் மற்றும் பிராவோ ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களை மிகவும் சோதித்தது. முன்னணி பந்துவீச்சாளர்கள் எவரும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இந்நிலையில் மழை வேறு குறுக்கிட்டது. அப்போது மேற்கு இந்திய தீவுகள் அணி 181 ரன்களை எடுத்திருந்தது. மழை நின்று ஆட்டம் தொடர்ந்தபோதும் மைதானத்தில் தண்ணீர் ஆங்காங்கே இருந்ததால் அதை துடைக்கும் பணியும் இடையில் நடந்தது. மீண்டும் ஆட்டம் துவங்கியதும் பிராவோ, பாவ்  இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை 201 க்கு உயர்த்தினர். அப்போது அபிமன்யு மிதுன் பந்தில் தோனியால் கேட்ச் பிடிக்கப்பட்ட பிராவோ அவுட்டானார். இவர் எடுத்த ரன்கள் 73. இதையடுத்து வந்த சம்மி வந்தவுடன் இஷாந்த் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து ராம்பால் களமிறங்கினார். ஆனால் அப்போது போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி அம்பயர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். மேற்கு இந்திய தீவுகள் அணி 71.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்திருந்தது. இதனால் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.  இயற்கை இடையூறுகளினால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கைநழுவியது. மேலும் பிராவோ, பாவ், சந்தர்பால் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கும் இந்தியாவின் தொடர்  வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்தது. தொடரை சமன் செய்ய வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.  இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டி முடிவு குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் தோனி இயற்கை காரணங்களால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது என்றார். மேலும் இந்த ரன்களில் டிக்ளேர் செய்த முடிவு தவறான ஒன்று அல்ல என்றும் வெற்றி பெறுவதற்காக தான் வகுத்த வியூகம் இயற்கையால் தட்டிப் பறிக்கப்பட்டது என்றார். 

இதற்கிடையில் இந்திய அணியினர் ஓவர்களை தாமதமாக வீசியதால் தோனிக்கு அவரது சம்பளத்தில் 60 சதவீதமும், மற்ற வீரர்களின் சம்பளத்தில் 30 சதவீதமும் பிடித்தம் செய்யப்படும் என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார்.  

இந்தியா -மேற்கு இந்திய தீவுகள் இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி வருகிற 6 ம் தேதி துவங்குகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்