முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவ-மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் -ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.- 5 - தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று கோட்டையில் பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தின்கீழ் 7  பேருக்கு இலவச பஸ் பாஸை நேரில் வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளிலும், அரசு கல்லூரிகளிலும் பயிலும் மாணவ- மாணவியருக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வழங்கப்படும் நடப்பு கல்வியாண்டிற்கான (2011​- 2012) இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, சென்னை மாநகரைச் சேர்ந்த 7 பள்ளிகளில் பயிலும் 7 மாணவ- மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் பயிலும் 26.3 லட்சம் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு முழுவதும் இலவச பயண அட்டையினை பெற்று பயனடைந்து வருகிறார்.

மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னையில் கடந்த ஆண்டு 3.40 இலட்சம் மாணவ மாணவியருக்கு இலவச பயண அட்டைகளை வழங்கியது. நடப்பு கல்வியாண்டில் (2011​- 2012) சுமார் 3.60 இலட்சம் மாணவ, மாணவியர் இலவச பயண அட்டைகளை பெறுவார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஆணைப்படி மாணவ மாணவியர்களுக்கு அவர்களது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கே நேரில் சென்று புகைப்படம் எடுத்து இலவச பயண அட்டைகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மாநகர் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. இந்த கல்வியாண்டில் (2011-​2012) தமிழ்நாடு முழுவதும் சுமார் 27.2 லட்சம் மாணவ, மாணவியர்கள் இச்சலுகையினை பெறுவார்கள். இதற்காக  303 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவாகும்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை விருகம்பாக்கம் சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி என். ஹரிணி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பி.லோகநாதன், கீழ்ப்பாக்கம் ஸ்ரீ பாலகிருஷ்ண கோத்தாரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவன் டி.விஷ்ணு, அடையாறு இராணி லேடி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி மாணவி பி.நசீராபேகம், எழும்nullர் பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என்.ஒய்.மெளலிஷா, மெளலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளி மாணவன் ஏ. ஸ்ரீநாத், பெரியமேடு செயிண்ட் மார்க்ஸ் நடுநிலைப்பள்ளி மாணவி டி.காயத்ரி ஆகிய 7 மாணவ மாணவியர்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள பயண அட்டைகளை வழங்கி, அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 

அதேபோன்று தமிழகத்தில் உள்ள பிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் இலவச பயண அட்டைகளை விரைந்து வழங்கிட வேண்டுமென்று அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்களுக்கு முதல்வர் ஆணையிட்டார்.

இலவச பேருந்து பயண அட்டைகளை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர்  தமிழக முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள். இந்நிகழ்வின்போது அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் போக்குவரத்துத் துறையின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்