முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டி ஊழல்: பிரதமரை எச்சரித்த மத்திய மந்திரிகள்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.- 5 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்புக் குழு செயல்பாடுகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு விளையாட்டு துறையை வகித்த 3 மத்திய அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்போட்டி அமைப்பாளராக இருந்து கல்மாடி மற்றும் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்பில் முறைகேடு நடப்பதாக பிரதமருக்கு விளையாட்டு துறை அமைச்சராக இருந்த மறைந்த சுனில்தத், முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர்கள் மணி சங்கர் அய்யர், எம்.எஸ். கில் ஆகியோர் கடிதம் எழுதி எச்சரித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பு குழு தலைவராக கல்மாடியை மத்திய அமைச்சரவை தேர்வு செய்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அகர்வால் என்பவர் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த விவரம் கிடைத்துள்ளது. 

பிரதமருக்கு சுனில்தத் எழுதியுள்ள கடிதத்தில் அப்போட்டி அமைப்பாளராக விளையாட்டுத்துறை அமைச்சரையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரை தேர்ந்தெடுத்திருப்பது சரியல்ல. இதை அமைச்சரவை கூட்டத்தில் சில அமைச்சர்கள் எதிர்த்தும் கல்மாடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தனது அதிருப்தியை அவர் தெரிவித்துள்ளார். 

அவருக்குப் பிறகு அப்பொறுப்பை வகித்த மணிசங்கர் அய்யர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒரு நாளைக்கு ரூ. 2.23 லட்சம் கொடுத்து ஆலோசனை நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் சம்மேளனத் தலைவர் மைக்ஹூப்பருக்கு ரூ. 2 கோடி செலவில் பண்ணை வீடு, மாதம் ஒரு முறை முதல் வகுப்பில் விமான டிக்கெட் கொடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

மணிசங்கர் அய்யருக்குப் பிறகு விளையாட்டு துறை பொறுப்பை வகித்த எம்.எஸ். கில் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கல்மாடியை தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்பதவிக்கு விளையாட்டு துறை அமைச்சரை தேர்வு செய்ய வேண்டும். எம்.பிக்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது கல்மாடி குழு காமன்வெல்த் போட்டிக்காக ரூ. 20 ஆயிரம் கோடி வரை செலவு செய்துள்ளது என அக்கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்