முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுவனை சுட்டுக்கொன்ற ராணுவ வீரருக்கு தூக்குத்தண்டனை பெற்றுத்தர வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை - 5 - சென்னை தீவுத்திடல் பகுதியில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் தில்ஷானை ஈவு இரக்கமின்ற சுட்டுக்கொன்ற ராணுவ வீரருக்கு தூக்குத்தண்டனை பெற்றுத்தர வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:​ சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் ஏற முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த தில்ஷான் என்ற சிறுவனை அங்கு பாதுகாப்புக்கு இருந்த ராணுவ வீரர் ஒருவர் இரக்கமே இல்லாமல் சுட்டுக்கொன்ற செயல் அனைவரின் இதயங்களையும் உலுக்கியுள்ளது. சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன். தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 13 வயதிலேயே வேலைக்குச் சென்று வந்திருக்கிறான். விடுமுறை நாளில் விளையாடச் சென்ற போதுதான் இந்தக் கொடுமை அரங்கேறியிருக்கிறது. அச்சிறுவன் தீவிரவாதியோ அல்லது பயங்கரவாதியோ அல்ல. 13 வயதே ஆன சிறுவனுக்கு ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புக்குள் நுழைவது தவறு என்று கூட தெரிந்திருந்திருக்காது. அப்படிப்பட்ட சூழலில் அந்தச்சிறுவன் மீது ஆறாவது அறிவு இல்லாமல் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. மனித நேயமுள்ள எவரும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் துடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு சிகிச்சை தரவேண்டும் என்ற குறைந்தபட்ச மனித நேயம் கூட இல்லாமல் அவனது உடல் மீது இலை, தழைகளை போட்டு மூடியும், ரத்த கறைகளை கழுவியும் தடயங்களை அழிப்பதிலும்தான் ராணுவத்தினர் தீவிரமாக இருந்துள்ளனர். சிறுவன் இறந்துவிட்ட பிறகு கூட அவனை தாங்கள் சுடவில்லை என்று ராணுவத்தினர் தரப்பில் அப்பட்டமான பொய் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மிகுந்த ராணுவக்குடியிருப்புக்குள் ராணுவத்தினரை தவிர வேறு எவரும் இதை செய்திருக்க முடியாது. வேலியே பயிரை மேய்வதைப் போல மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரர் ஒருவரே அப்பாவி சிறுவனை சுட்டுக்கொன்றிருப்பது மன்னிக்க முடியாத செயல். இதற்கு காரணமான ராணுவ வீரரை தமிழக காவல் துறை உடனடியாக கைது செய்து, கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து அதிக பட்ச தண்டனையான தூக்குத்தண்டனையை பெற்றுத்தரவேண்டும். சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள ரூ.5 லட்சம் மதிப்பீடு போதுமானதல்ல. ரூ.10 லட்சம் இழப்பீட்டை சம்பந்தப்பட்ட வீரரிடமிருந்தோ அல்லது பாதுகாப்பு துறையிடமிருந்தோ பெற்று சிறுவனின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்