முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி 11 காங்கிரஸ் அமைச்சர்கள் 73 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு விலகல்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூலை - 5 - தனித் தெலுங்கானா மாநிலத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திராவின் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த  11 அமைச்சர்கள் உட்பட 39 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மற்றும்  தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த 34 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டி.ஆர்.எஸ்.)கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். இவரது போராட்டத்திற்கு ஒரு கட்டத்தில் மத்திய அரசும் செவிசாய்த்தது. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் வாய்தவறி உறுதியளித்துவிட்டார். ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு தெலுங்கானா எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவைப் பிரிக்கக்கூடாது என்று கூறி அவர்களும் போராட்டத்தில் குதித்தார்கள். தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் உட்பட டி.ஆர்.எஸ். கட்சியினரும் மற்றொரு புறம் போராட்ட களத்தில் குதிக்க, ஆந்திராவே போர்க்களமானது. பல பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. ஆந்திராவின் பொருளாதாரமே பாதிக்கும் அளவுக்கு ஒரு மோசமான சூழ்நிலை உருவானதை அடுத்து மத்திய அரசு விழித்துக்கொண்டு இந்த பிரச்சனையைத் தீர்க்க ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை அமைத்து அத்தோடு தன் கடமை முடிந்ததாக பிரச்சனையை முடித்துக்கொண்டது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷனும் தெலுங்கானா அமைப்பதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து மத்திய அரசிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது. தெலுங்கானா மாநிலத்தை அமைக்கலாம். அமைக்காமலும் இருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களைக்கூறி உள்ளதையும் குழப்பியது இந்த கமிஷன். அதன் பிறகு சில நாட்கள் இந்த பிரச்சனை கிடப்பிலேயே போடப்பட்டு கிடந்தது. 

இப்போது மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் வேண்டும் என்று காங்கிரசாரே போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். இதனால் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கட்சி மேலிடம் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு உத்தரவிட அவரும் முயற்சி செய்து பார்த்தார். ஆனால் எதுவும் பலிக்கவில்லை. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் என்று ஒரு கதை சொல்வார்களே அதைப்போல, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போர்க்கொடி உயர்த்த துவங்கிவிட்டார்கள். இதன் உச்சகட்டமாக நேற்று 11 அமைச்சர்கள் உட்பட 39 காங்கிரஸ்  எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதேபோல் 34 தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள். 

டெல்லியில் 7 காங்கிரஸ் எம்.பி.க்களும் லோக்சபையில் இருந்து ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தனர். இவர்கள் நேற்று சபாநாயகர் மீராகுமாரை சந்திப்பதாக இருந்தது. அவர்களும் இவர்களுக்காக சில மணி நேரம் காத்திருந்தார். ஆனால் சொன்னபடி காங்கிரஸ் எம்.பி.க்கள் வரவில்லையாம். இதனால் வெறுத்துப்போன மீராகுமார் அங்கிருந்து போனதுதான் மிச்சம். ஆந்திராவில் நேற்று ஜனாரெட்டி, கீதாரெட்டி, பொன்னல லட்சுமய்யா, கோமதிரெட்டி  வெங்கட்ரெட்டி ஆகியோர் உட்பட 11 அமைச்சர்கள் தெலுங்கானா மாநிலத்தை உடனே அமைக்கக் கோரி தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். சட்டமன்ற துணை சபாநாயகரை நண்பகல் 12 மணிக்கு சந்தித்து இவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். இதேபோல் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 34 தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா கடிதங்களை துணை சபாநாயகர் மல்லுபத்தி விக்கிரமர்க்காவிடம் சமர்ப்பித்தனர். 39 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இதே பிரச்சனைகளுக்காக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.  எது எப்படியோ தெலுங்கானா பிரச்சனை மீண்டும் பற்றி எரிய துவங்கிவிட்டது. இந்த தீயில் ஆந்திர மாநிலம் பொசுங்காமல் இருக்கும் வரை சந்தோஷம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்