முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபுணர்கள் குழு தயாரித்த 597 பக்க சமச்சீர் கல்வி அறிக்கை ஜகோர்ட்டில் தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 6 - நிபுணர்கள் குழு தயாரித்த 597 பக்க சமச்சீர் கல்வி அறிக்கை ஜகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.இது நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கடந்த ஆட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்டது.  சமச்சீர்  கல்வி  பாடத்திட்டம்  தரமானதாக இல்லை .எனவே இந்தாண்டு பழைய பாடமுறையே நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து ஜகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் 1 மற்றும் 6 ம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறையே தொடரவேண்டும் ,மற்ற வகுப்புக்களுக்கு சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்துவது குறித்து நிபுணர்கள் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  ஜகோர்ட் உத்தரவிட்டது. ஜகோர்ட் உத்தரவை நடமுறைப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசின தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட கல்வி நிபுணர்கள் குழுவை தமிழக அரசு கடந்த மாதம்  அமைத்தது.
இந்த குழு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-
தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறந்த எதிர்காலம் அமையப்பெற, தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2010-ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச்சட்டத்திற்கு எனது அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தினை எதிர்த்து, ஒருசிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த திருத்த சட்டத்திற்கு இடைக்காலத்தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் இந்த சிறப்பு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது 15.6.11 நாளிட்ட தீர்ப்பில், பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாடநூல்களின் தரம் ஆகியன குறித்து ஆராய்வதற்கு, தலைமை செயலாளர் தலைமையில், இரு மாநில பிரதிநிதிகள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த குழு தனது அறிக்கையை 6.7.11-க்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்  என்றும் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க, கீழ்க்காணும் உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது:- தமிழக அரசின் தலைமை செயலாளர் - தலைவர், இரு மாநில பிரதிநிதிகள்: ஜி.பாலசுப்பிரமணியன் - முன்னால் இயக்குநர் (கல்வி), மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் - உறுப்பினர், விஜயலட்சுமி சீனிவாசன் - முன்னாள் முதல்வர் - லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை மற்றும் ஆலோசகர், சென்னை சேவா சதன் (உதவி பெறும் பள்ளி) தாம்பரம் - உறுப்பினர்,
இரு கல்வியாளர்கள்: சி.ஜெயதேவ் - நிறுவனர் மற்றும் செயலாளர், டி.ஏ.வி பள்ளி குழுமம், கோபாலபுரம், சென்னை - உறுப்பினர், ஒய்.ஜி.பார்த்தசாரதி - முதல்வர் மற்றும் இயக்குனர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை - உறுப்பினர், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள்: பேராசிரியர் பி.கே.திரிபாதி - அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித்துறை, புதுடெல்லி - உறுப்பினர், பேராசிரியர் அனில் சேத்தி - சமூக அறிவியல் துறை, புதுடெல்லி - உறுப்பினர், அரசு செயலாளர் - பள்ளிக்கல்வித்துறை - உறுப்பினர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்  - உறுப்பினர்-செயலர்.
மேற்கண்ட குழு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 6.7.11-க்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து  அந்த நிபுணர் குழு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. நிபுணர் குழுவினர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்து 4 முறை ஆய்வு செய்தனர்.  இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் 597 பக்க அறிக்கையாக தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கை சென்னை ஜகோர்ட்டில் நேற்று(6.7.2011)  தாக்கல் செய்யப்பட்டது.  தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சு முன்பு அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன், ஜகோர்ட் பதிவாளர் ஜெனரல் விமலா ஆகியோர் நிபுணர்கள் குழு தயாரித்த சமச்சீர் கல்வி அறிக்கையை தாக்கல் செய்தனர். வழக்கு தொடர்ந்த மனுதார்களுக்கும் இந்த அறிக்கை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு 7-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அன்று முதல் தினந்தோறும் வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.
ஜகோர்டில்  தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழு தயாரித்த அறிக்கையில் கீழ்கண் ட தகவல்கள தெரிவிக்கப்பட்டுள்ளன.  நடப்பு கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை செயல்படுத்த முடியாத அளவிற்கு குறைகள் உள்ளன. கல்விக்கான தேசிய ஆராய்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) 2005 ல் வடிவமைத்த தேசிய பாடத்திட்டம் வடிவமைப்புக்கு ஏற்ப சமச்சீர் பாடத்திட்டங்கள்   தரமானதாக  இல்லை. அதற்கு இணையாக தயாரிக்கப்படவில்லை. அவசர கோலத்தில் இந்தப் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மெட்ரிக்குலேஷேன் தரத்திற்கு சில பாடங்கள் அமைந்துள்ளன. இதனை மாணவர்களால் புரிந்துகொள்ள முடியாது. தமிழில் இருந்து அங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ததில் தவறுகள் நிறைந்துள்ளன. மொழிப் பாடத்தில் இலக்கணப் பிழைகள், கருத்துப் பிழைகள் உள்ளன. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே இந்த சமச்சீர் பாடத்திட்டத்தை கொண்டு இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த இயலாது. இந்த பாடத்திட்டங்கள் முழுமையாக திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்