முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். பொதுச்செயலாளர் ராகுல்காந்தி விவசாயிகளுக்காக பாத யாத்திரை

புதன்கிழமை, 6 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூலை - 6 - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி விவசாயிகளின் கஷ்டத்தை மாநில அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக பாத யாத்திரை மேற்கொண்டார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை ராகுல்காந்தி எடுத்து வருகிறார். 1980 க்கு பிறகு இங்கு காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளே ஆட்சியை கைப்பற்றி வருகின்றன. ஆனால் ராகுலின் தீவிரமான பிரச்சாரத்தால் கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களை கைப்பற்றியது. இதனால் உத்தரபிரதேச மாநில விவகாரங்களில் ராகுல்காந்தி பெரும் ஆர்வம் காட்டி வருகிறார். உத்தரபிரதேசத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தியதில்  அம்மாநில அரசு விவசாயிகளுக்கு எதிராக  செயல்படுவதாக குற்றம்சாட்டி அம்மாநில எதிர்க்கட்சிகள் அனைத்தும் குரல்கொடுத்து வருகின்றன. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அம்மாநில முதல்வர் மாயாவதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளால் எந்த பயனும் ஏற்படவில்லை. இதனால் சமீபத்தில் பட்டாபர்செளஸ் பகுதியில் பெரும் கலவரம் மூண்டது. இப்பகுதியில் காங்கிரஸ்  கட்சி சார்பில் மாநாடு ஒன்று நடத்த அனுமதி கோரப்பட்டது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்பகுதியில் மாநாடு நடத்த உ.பி. அரசு மறுப்பு தெரிவித்தது. வேண்டுமானால் வேறு இடங்களில் மாநாடு நடத்த காங்கிரஸ் அனுமதி கோரினால் அதுபற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேற்று பட்டாபர்செளஸ் நகரில் பாத யாத்திரையை துவக்கினார். பட்டாவில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் புடைசூழ புறப்பட்ட அவர், ரஸ்தம்பூர் மற்றும் பாய்பூரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார். மேலும் கிராமம் கிராமமாக மக்களின் குறைகளை கேட்க உள்ளார். 

இதுகுறித்து ராகுல் குறிப்பிடுகையில்,  நான் விவசாயிகளின் பிரச்சனைகளை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்திற்கு தெரியவில்லை. மேலும் எங்கெல்லாம் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ள இருக்கிறேன் என்றார். ராகுல்காந்திக்கு வழிநெடுகிலும் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வரும் 9 ம்தேதி அலிகாரில் நடக்கும் விவசாயிகள் மகா பஞ்சாயத்தில் ராகுல்காந்தி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த மாநாட்டிற்கு மாயாவதி அரசு ஏற்கனவே அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்