முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரசேகரராவ், விஜயசாந்தி எம்.பி. பதவி ராஜினாமா

புதன்கிழமை, 6 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூலை - 6 - தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பகுதியில் 2 நாள் பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் தெலுங்கானா பகுதியின் 11 மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும் இப்பிரச்சனையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கித் தர வேண்டும் என்று கோரி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து தனி தெலுங்கானா அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் உறுதியளித்தபடி இன்னும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படவில்லை. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்பதில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக உறுதியாக உள்ளன. நேற்று முன்தினம் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளைச் சேர்ந்த 75  எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தள்ளனர். மேலும் 12 எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.  இதனால் ஆந்திர அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், அக்கட்சியின் எம்.பி. விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை நேற்று ராஜினாமா செய்துள்ளனர்.  இவர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் சபாநாயகர் மீராகுமாரை சந்திக்கப்போவதாக சந்திரசேகரராவ் கூறியுள்ளார். மேலும் 2 தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். 

இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆந்திர மாநில ஜவுளித்துறை அமைச்சர் சங்கர்ராவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆந்திர துணை சபாநாயகருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இவரையும் சேர்த்து ராஜினாமா செய்துள்ள ஆந்திர அமைச்சர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தநிலையில் தெலுங்கானா பகுதியில் ஐதராபாத் உட்பட 11 மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் தெலுங்கானா பகுதி முழுவதுமே ஸ்தம்பித்தது. 2 நாள் பந்த் போராட்டத்தை அடுத்து இந்த பகுதியில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மார்க்கெட்டுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.  தெலுங்கானா அரசியல் கூட்டு செயற்குழு அழைப்பிற்கு இணங்க நேற்று இந்த பந்த் நடைபெற்றது. பந்த்தின் காரணமாக பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக  பேருந்துகளும் இயக்கப்படவில்லை. சில இடங்களில் சாலைகளில் ஓடிய வாகனங்களை வழிமறித்து தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்த முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மாணவர்கள் மீறிச் சென்றதால் போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

ஐதராபாத்தில் பெரும்பாலான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் ஆட்டோ ரிக்ஷாக்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தன. இந்த இரண்டு நாள் பந்த்தை முன்னிட்டு தெலுங்கானா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வரும் நாட்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையை ஏற்படுத்தி போராட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டு செயற்குழு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசியல் கூட்டு செயற்குழுவில் டி.ஆர்.எஸ்., பி.ஜே.பி. உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. தெலுங்கானா பகுதியில் நேற்று நடந்த பந்த் போராட்டத்தினால் அந்தப் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த 2 நாள் போராட்டத்தின் காரணமாக தெலுங்கானா பகுதியில் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு வங்கி பணப் பரிமாற்றங்கள் முடங்கிப்போயுள்ளன. இந்தப் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் வங்கிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே வங்கிக் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்று வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் ஒருவர் கூறினார்.  வங்கி பண பரிமாற்ற முட்டுக்கட்டைகளை போக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்