முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறனிடம் விளக்கம் கேட்க சி.பி.ஐ. முடிவு

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.8 - ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதிமாறனிடம் விளக்கம் கேட்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ. நேற்று முன்தினம் சுப்ரீம்கோர்ட்டில் தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள தி.மு.க. வை சேர்ந்த தயாநிதிமாறன் எம்.பி. குற்றவாளி என்றும் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் குழுமத்திற்கு விற்பனை செய்ய சிவசங்கரவை தயாநிதி மாறன் நிர்ப்பந்தம் செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதில் தயாநிதி மாறனின் பங்கு குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும் சி.பி.ஐ. சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது.

கடந்த 2004-2007-ம் ஆண்டுகளில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதில் சில சக்திகள் தலையிட்டுள்ளன என்றும் சி.பி.ஐ. அந்த அறிக்கையில் கூறியுள்ளது. அதனால் சில சாட்சிகளிடம் விசாரணை நடத்திய பிறகும் மற்றும் பலரின் வாக்குமூலத்தை பெற்ற பின்பும் தயாநிதி மாறனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் சி.பி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 2001-2008-ம் ஆண்டுவரை ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக பூர்வாங்க விசாரணையை சி.பி.ஐ. நடத்தி அதை பதிவு செய்துள்ளது. 2001-2008-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணை இன்னும் 3 மாதங்களில் முடிவடைந்துவிடும் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்த புதிய குற்றச்சாட்டை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்றும் சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. உறுதி அளித்துள்ளது. 

ஏர்செல் நிறுவனத்தை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கர் ஆரம்பித்து நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை கண்ட தயாநிதிமாறன் சன் டி.வி. குழுமத்தில் முதலீடு செய்யும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு சிவசங்கரன் மறுத்ததாகவும் தெரிகிறது. அதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியா நாட்டை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தயாநிதிமாறன் வலியுறுத்தியதாக சிவசங்கரனே சி.பி.ஐ. யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்ட 6 மாதங்களுக்குள் தேவையான அனைத்து லைசென்ஸ்களையும் தயாநிதிமாறன் வழங்கியுள்ளார். அதேசமயத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு தேவையான ஒருங்கிணைந்த சேவை உரிமங்கள்( யுஏஎஸ் லைசென்ஸ்களை) சுமார் இரண்டாண்டு காலமாக வழங்காமல் தயாநிதிமாறன் இழுத்தடித்து வந்தார் என்றும் சிவசங்கரனே வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஏர்செல் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பிறகு சன் டி.வி. குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. 2ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில் எந்த ஒரு ஆதிக்க சக்தியும் குறுக்கீடு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சி.பி.ஐ.யை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

சன் டி.வி. குழுமத்திற்கு தயாநிதி மாறன் வீட்டில் இருந்து முறைகேடான முறையில் அரசு கேபிள் இணைப்பு கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதிமாறன் ராஜினாமா செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா ராஜினாமா செய்தார். அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளின் காரணமாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்துள்ளார். தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரை பிரதமர் நீக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கேபிள் இணைப்பு கொடுத்தது தொடர்பாக தயாநிதிமாறன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்