முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் கோயிலில் தங்கப்புதையலா? ஆய்வு செய்ய கோரிக்கை

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      ஆன்மிகம்

திருச்சி,ஜூலை.- 9 - 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையாக விளங்கக்கூடியது ஸ்ரீரங்கம். ஏழு சுற்றுப்பிரகாரங்களையும் 21 கோபுரங்களையும் கொண்ட மிகப்பெரிய கோயில் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம். தற்போது இந்த கோயிலில் தங்கப் புதையல் இருப்பதாக ஆய்வறிக்கை கூறியுள்ளதாக கூறி  ஆய்வு செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயிலில் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடந்த அறையை திறந்தபோது விலையுயர்ந்த ரத்தினங்களும் வைரங்களும் விலை மதிக்க முடியாத தங்க ஆபரணங்களும் கிடைக்கப்பெற்றன. இவற்றின் மதிப்பு லட்சம் கோடியை தாண்டுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அந்த கோயிலுக்கு கறுப்பு பூனை படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீரங்கம் கோயிலிலும் புதையல் இருப்பதாக தகவல்கள் எழுந்துள்ளன. இதுபற்றி ஸ்ரீரங்கம் கோயிலையும் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்த ஆய்வாளர் கிருஷ்ணமாச்சாரியார் கூறும்போது, ஸ்ரீரங்கம் கோயிலிலும் விலையுயர்ந்த ஆபரணங்கள், பொற்காசுகள் கொண்ட புதையல் இருப்பதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. கி.பி. 1736ம் ஆண்டு முதல் தொடர்ந்து 48 ஆண்டுகளுக்கு மேலாக பல ஆபத்துகளை ஸ்ரீரங்கம் கோயில் சந்தித்திருக்கிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி அனந்தரங்கப்பிள்ளையின் டைரி குறிப்பின்படி 1755ம் ஆண்டு பிரெஞ்ச் படையினர் ஸ்ரீரங்கம் கோயிலில் விலையுயர்ந்த ஆபரணங்கள், பொற்காசுகள் இருந்த ஸ்ரீபண்டாரத்தை கொள்ளையிட வந்தனர். அப்போது, கோயிலின் ஆலிக்கேட்டான் திருச்சுற்றில் உள்ள கருடால்வார் சன்னதிக்கு பின்புறம் இந்த அனைத்து ஆபரணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு அடையாளமாக கருடாழ்வாரின் பின்புறம் ஜன்னல்கள் இருக்கின்றன. இந்த ஜன்னல்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.
இந்த ஜன்னலின் வழியாக  நவீன கருவிகளின் மூலம் எந்த சேதமும் இல்லாமல் புதையல் இருக்கின்றதா இல்லையா என்ற நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆய்வாளர் கிருஷ்ணமாச்சாரியார் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஒரு முறை இதுபோன்று கருடாழ்வாரின் பின்புறம் புதையல் உள்ளது என்று கூறி இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆய்வு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாதசுவாமி கோயிலில் புதையல் கண்டு பிடிக்கப்பட்டவுடன் தற்போது மீண்டும் ஸ்ரீரங்கம் கோயிலில் புதையல் உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுவும் பெருமாள் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!