நிலுவை வரிகளை விரைந்து வசூலிக்க வேண்டும்: பிரணாப்முகர்ஜி

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூலை.- 11 - நிலுவையில் உள்ள வரிகளை விரைந்து வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.  வருமான வரி, சுங்க வரி, மத்திய கலால் வரித் துறையை சேர்ந்த தமிழக மண்டல அளவிலான உயர் அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது,
நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டில் நேரடி வரிகள் வாயிலான வரி வசூல் 26.43 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் நேரடி வரி வசூல் நிலையான தன்மையை கொண்டுள்ளது. பட்ஜெட்டில் வரி வசூலுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் வகையில் நிலுவையில் உள்ள வரிகளை விரைந்து வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவை வரியின் அபரிமிதமான வளர்ச்சி சுங்கவரி நீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்துள்ளது. தனி நபர் செலுத்தும் வருமான வரியில் கூடுதலாக வரி செலுத்திய 2.65 லட்சம் பேருக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் நேரடி மறைமுக வரி வசூலுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட தமிழக மண்டலம் கூடுதலாக 10 சதவீதம் வரி வசூலிக்க வேண்டும் என்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் மத்திய நிதி துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம், மத்திய திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: