முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மேயர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அதிமுக வெளிநடப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.12 - திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. மதுரை மாநகராட்சி சிறப்பு கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஆணையாளர் செபாஸ்டின், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க தந்தை பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோர் பாடுபட்டனர். அதே வழியில் எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக தந்து ஏழை மக்களின் இதயங்களின் குடியிருந்தவர் எம்.ஜி.ஆர். அதே போல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29 சதவீத கிடைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர், மத்திய அரசின் நுழைவு தேர்வுக்கு உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று தலித் மக்களுக்கு உதவி செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. அதே போல் இலங்கையில்  ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு முகாம்களில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் ஈழ தமிழர்களுக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா.

    முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அனைத்து தரப்பு மக்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.அண்ணா பிறந்தநாளில் கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்திய திருநாட்டில் தைரியமாக எந்த கருத்தையும் எடுத்துச்சொல்லும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான். தமிழக மக்கள் திமுகவுக்கு சாட்டையடி கொடுத்து, அதிமுகவை வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.  இவ்வாறு சாலைமுத்து பேசிக்கொண்டிருக்க, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து பேசிய சாலைமுத்து, திமுகவினர் தண்டனை அனுபவிக்கும் காலம் வந்து விட்டது. கண்மாயில் 20 ஏக்கர் நிலத்தை திமுகவினர் ஆக்கிரமித்து உள்ளனர். இதன் மீதெல்லாம் அரசு நடவடிக்கை எடுக்கும். மதுரை மாநகராட்சி பகுதியில் எங்கு பார்த்தாலும் மீன்கடைகளாக காட்சியளிக்கிறது. துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த கடைகளுக்கு மாநகராட்சி முறையாக அனுமதி அளித்துள்ளதா? திமுகவில் இருந்த செல்லத்துரை என்பவர் புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் 36 கடைகளை பெற்றுள்ளார்.

    மாநகராட்சி சார்பில் விடப்படும் கடைகள் ஏழைமக்கள் பிழைப்புக்காகாதான் விடப்படுகிறது. ஆனால் இப்படி தனிநபர்கள் சம்பாதிப்பதற்காக விடப்படுவது கண்டிக்கத்தக்கது. மதுரை நெல்பேட்டையில் ஆடு வதை கூடத்தை தனிநபர் வற்புறுத்தலின் பேரில் மாற்றப்பட்டுள்ளது. அதே இடத்தில் மீண்டும் ஆடு வதை கூடம் செயல்பட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியின் போது முறைகேடாக நடந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நானோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ தலையிடமாட்டோம். துணை மேயர் தனது மனைவி பெயரில் ஒரு காம்பள்க்ஸ் கட்டி வருகிறார்.இது மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணையாளர்:​- இது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி இருப்பதால் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  தடை உத்தரவு விலக்கப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை தொடர்ந்து துணை மேயர் குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று சத்தம் போட்டனர். இதன் பிறகு சாலைமுத்து பேசியதாவது, மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் பெயரில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுடுகாடு அருகில் கட்டிடம் கட்டக்கூடாது என்று விதி முறை உள்ளது. விதிமுறையை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும். ஒரு மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வரின் மகன் இப்படி மாநகராட்சி விதியை மீறலாமா? என்றார். திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும். அவரது சகாக்களும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக, கம்யூனிஸ்ட்கட்சியினர், தேமுதிகவினர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

விசாரணை கமிஷன் வேண்டும் - மார்க்சிய கம்யூ.வலியுறுத்தல்

 

மாமன்ற கூட்டத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு தலைவர் கணேசன் பேசும் போது, மாநகராட்சி முலம் நடந்த ரிங்ரோடு வசூல், எகோ பார்க் கட்டணவசூல், சென்ட்ரல் மார்க்கெட் டெண்டர் விட்டது, ராஜாக்கூரில் வீடுகள் கட்டியதில் முறைகேடுகள்,தரமற்ற சாலைகள், ஒப்பந்த ஊழியர்கள் நியமித்ததில் முறைகேடு, மாநகராட்சி சொத்து அபகரிப்பு போன்றவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்