முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைகானலில் ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

கொடைக்கானல், ஜூலை.13 - கொடைக்கானலில் தி.மு.க. மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்காக ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத்தலைவர் முகமது இபுராகீம் உட்பட 3 பேர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் அருகிலுள்ள சிவனடி சாலையைச் சேர்ந்தவர் சேவியர் மைக்கேல்(52). இவருக்கு சொந்தமாக இப்பகுதியில் நாலரை ஏக்கர் நிலம் உள்ளது. இவ்விடத்தின் மதிப்பு தற்போதைய நிலவரப்படி சுமார் ரூ.50 கோடியாகும். இந்த இடத்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விக்டர் டேப் என்பவரிடம் இருந்து வாங்கி கடந்த 40 ஆண்டுகளாக பைபிள் கல்லூரி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த உக்கம் சந்த் கலடா என்ற சேட் தனக்குத்தான் விக்டர் டேப் இந்த இடத்தை எழுதிக் கொடுத்துள்ளார் என்றும் எனவே இடத்தைக் காலி செய்யும்படியும் கூறியுள்ளார். உக்கம் சந்த் கலடாவிற்கு பவர் ஏஜெண்டாக திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் இ.என்.பழனிச்சாமி இருந்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஐ.ஜி.சிவனாண்டியும் உடந்தையாக இருந்துள்ளார். 

கொடைக்கானலில் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இபுராகிம் பதவி வகித்து வந்ததால் இந்த இடத்தை அவரை வைத்து மிரட்டி வாங்கி காய் நகர்த்தியுள்ளனர். அதன்படி கடந்த 7.2.2010ம் தேதியன்று சேவியர் மைக்கேல் மற்றும்  அவரது குடும்பத்தினரை அப்பகுதியில் இருந்து விரட்டி விட்டுள்ளனர். இதுகுறித்து அப்போதைய டி.ஜி.பி.க்கு அன்றே சேவியர் புகார் மனு அளித்தார். இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இந்நிலையில் சேவியர் மைக்கேல் மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த மனு மீது கடந்த 27.4.2011ம் தேதியன்று கொடைக்கானல் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இபுராகீம், நில புரோக்கர்கள் சேகர் செபாஸ்டின், தலித் சிங் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொழிலதிபர் இ.என்.பழனிச்சாமி முன்ஜாமீன் பெற்றுக் கொண்டார். தற்போது இந்த இடம் சென்னையைச் சேர்ந்த ரூபன் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார்,  தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இபுராகீம், நில புரோக்கர்கள் சேகர் செபாஸ்டின், தலித்சிங் ஆகிய மூவர் மீதும் கொலைமிரட்டல் விடுத்தது, கட்டாயப்படுத்தி குடும்பத்தினரை வெளியே விரட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததுடன் கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்காக தான் இந்த இடத்தை தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இபுராகீம் அபகரித்துள்ளதாக கூறினர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்