முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூலை.13 - கவர்னர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். அசன் அலிக்கு பாஸ்போர்ட் கிடைக்க சிபாரிசு செய்ததாக வந்த புகார் குறித்து புதுவை கவர்னர் இக்பால்சிங்கிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை செய்தனர். மேலும் காரைக்காலில் மருத்துவக்கல்லூரி தொடங்க தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி கிடைக்க அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் கவர்னர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இதையடுத்து கவர்னரை கைது செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கடந்த 8-ந் தேதி தண்டோரா பிரச்சாரம் செய்தனர். இதையடுத்து 12-ந் தேதி கவர்னர் மாளிகை அருகே கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை.  

ஆனாலும் அவர்கள் கறுப்புக்கொடியுடன் காலையில் செஞ்சி சாலையில் திரண்டனர். அவர்கள் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். 

போராட்டத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். தமிழ் மாநில குழு உறுப்பினர் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், முருகன், சீனுவசான் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் 65 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த போராட்டத்தையொட்டி சட்டசபை வளாகம், கவர்னர் மாளிகை வளாகம், தலைமை தபால் நிலையம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்