முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவையில் 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

புதன்கிழமை, 13 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.13 - மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் உள்பட புதியதாக 8 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தயாநிதிமாறன் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசா அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.

தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான தயாநிதி மாறனும் ஏர்செல் நிறுவனம் விற்பனை விவாகரத்தில் ராஜினாமா செய்துவிட்டார். மேலும் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் 3 கேபினட் அமைச்சர்கள் பதவி காலியாக இருந்தது. அதனால் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மன்மோகன் சிங் பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்தும் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்வதையும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று மத்திய அமைச்சரவையை பிரதமர் மன்மோகன் சிங் மாற்றி அமைத்தார். 

4 பேருக்கு கேபினட் அந்தஸ்த்தில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கிஷோர் சந்திர தியோ மலைவாழ் மக்கள் நலம் மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பெனி பிரசாத் வர்மா, எஃகு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் திவேரி ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இந்தி இலாகாவை மம்தா பானர்ஜி வைத்திருந்தார். அவரது கட்சிக்காரருக்கே இந்த இலாகா மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ராம் ரமேஷ் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார். 

இந்த 4 கேபினட் அமைச்சர்களை தவிர மேலும் 4 இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் முதலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தவர். ஸ்ரீகாந்த் ஜெனா,புள்ளி இயல் திட்ட அமுலாக்க, இரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பவன் சிங் கெடோவர், வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைச்சர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுதீப் பந்தோப்த்யாயா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சரண்தாஸ் மகந்த், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிதேந்திர சிங்,உள்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மிலிந்த் தியோரா,தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள முரளி தியோராவின் மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் சுக்லா, பாராளுமன்ற விவகாரத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சில மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விலாஸ் ராவ் தேஷ்முக்( அறிவியல், தொழில் நுட்பம்) வீரப்பமொய்லி (கம்பெனி விவகாரம்) ஆனந்த் சர்மா (வணிகம்,தொழில், கூடுதல் பொறுப்பாக ஜவுளித்துறையும் கொடுக்கப்பட்டுள்ளது) பி.கே.பன்சால்(பாராளுமன்ற விவகாரம். இவர் நீர்வளத்துறையும் கூடுதலாக கவனிப்பார்) சல்மான் குர்ஷீத் (சட்டம், நீதி. இவர் சிறுபான்மையினர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார்) இ.அகமது வெளியுறவுத்துறை மற்றும் மனிதவளத்துறை மேம்பாடு) புதுவையை சேர்ந்த நாராயணசாமி ( தனிநபர் நலன், பென்சன்,மக்கள் குறை தீர்ப்பு பிரதமர் அலுவலகம்) ஹரீஸ் ரவுத் (விவசாயம்,உணவு பதப்படுத்தும் தொழில், பாராளுமன்ற விவகாரம்) முகுல்ராய் (கப்பல்துறை) அஸ்வினி குமார் (திட்டம், அறிவியல், தொழில்நுட்பம்) 

இந்த நிலையில் ராஜினாமா செய்த தயாநிதிமாறன், முரளி தியோரா,ஹண்டிக், காந்திலால் புரியா ஆகியோர்களின் அமைச்சர் பதவி ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொண்டார். மேலும் மத்திய அமைச்சர்கள் எம்.எஸ்.கில், சாய் பிரதாப், அருண் எஸ்.யாதவ் ஆகியோர்களை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்கிவிட்டார். 

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நேற்று மாலை சரியாக 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்துவைத்தார். பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத்பவார், கபில் சிபல் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!