முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடிப்பு

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

மும்பை - ஜூலை.14 - மும்பையில் நேற்று மாலையில் மீண்டும் மக்கள் நடமாட்டம் மிகுந்த 3 இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடித்தனர். இதில் 21 பேர் பலியானார்கள் மற்றும் 200 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி தேசிய பாதுகாப்பு படையை உஷார் நிலையில் வைத்திருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானுக்கு சென்று சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து பெரும் நிதியை பாகிஸ்தான் அரசு செலவழித்து வருவதோடு இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடவும் உதவி வருகிறது. இந்தியா மீது நேரடியாக போர்தொடுத்தால் நாட்டை இழக்க நேரிடும் என்று கருதும் பாகிஸ்தான்,சீனாவின் உதவியோடு இந்தியாவில் குறிப்பாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, கொச்சி,புனே மற்றும் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் மூலம் நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் பண நகரான மும்பை மீதுதான் அடிக்கடி தீவிரவாதிகளை தூண்டிவிட்டு குண்டுகளை வெடிக்கச் செய்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு ஓடும் ரயில்களில் தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் பலர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். அதனையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் 10 தீவிரவாதிகள் பாகிஸ்தான் உதவியுடன் மும்பையில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். 

இந்த சம்பவத்தையொட்டி பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டது. மும்பையை தாக்கிய தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ராணுவ அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவு பிரிவு அதிகாரிகள் ஆகியோர்களின் பட்டியலை பாகிஸ்தானிடம் கொடுத்து அவர்களை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பும்படி கோரியது. இதையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக போய்விட்டது. அப்படி இருந்தும் உலக நாடுகளின் நன்மையை கருத்தில் கொண்ட இந்தியா, பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியது. சமீபத்தில்தான் இஸ்லாமாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதனையடுத்து டெல்லியில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை இந்த மாதம் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் பழைய குருடி கதவை திறடி என்ற பழமொழிக்கேற்ப பாகிஸ்தான் நாடானது, அந்த நாட்டில் இயங்கி வரும் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு மீண்டும் மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த 3 இடங்களில் தொடர் குண்டுகளை வெடிக்க செய்துள்ளது. இதில் 21-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று முதலில் வந்த தகவல்கள் கூறுகின்றன. மும்பை நகரில் தாதர், ஓப்ரா ஹவுஸ், ஜாவேரி பஜார் ஆகிய 3 இடங்களில் தீவிரவாதிகள் நேற்று மாலையில் தொடர்குண்டுகளை வெடித்தனர். ஓப்ரா ஹவுசு மற்றும் ஜாவேரி பஜார் தெற்கு மும்பை பகுதியில் உள்ளது. மத்திய மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள தாதர் உள்ளது. இந்த 3 இடங்களிலும் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். அங்கு குண்டுவெடித்தால் உயிர்சேதம் அதிகமாக இருக்கும் என்று கருதிய தீவிரவாதிகள் அந்த 3 இடங்களில் தொடர் குண்டுகளை வெடித்துள்ளனர். இந்த தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள்தான் நடத்தியுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி மும்பை மாநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாதரில் குண்டுவெடித்ததில் 6 பேரும் ஜாவேரியில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகிவிட்டதாகவும் ஜவேரி மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர்கள் எடுத்துச்செல்லப்பட்டனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். தாதர் பகுதியில் பல குண்டுகள் வெடித்தன. அதில் தாதரின் மேற்கு பகுதியில் உள்ள பஸ்ஸ்டாப்பில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு குண்டு வெடித்தது. ஜாவேரி பகுதியில் மீட்டர் பாக்ஸில் வைத்து குண்டு வெடித்திருக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மும்பையில் தொடர் குண்டுகள் வெடித்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு முன்னதாக தகவல் வந்தது என்று முதலில் வந்த தகவல் கூறியது. 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி தேசிய பாதுகாப்பு படையை உஷார்நிலையில் வைத்திருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மும்பைக்கு நேற்று இரவே வந்துவிட்டனர். அவர்கள் வெடிகுண்டு தடயங்களை சேகரிக்க தொடங்கிவிட்டனர். இந்த குண்டுவெடிப்பு தீவிரவாதிகள்தான் நடத்தியுள்ளனர் என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்