முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா பகுதியில் ரயில் மறியல் போராட்டம்

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

ஐதராபாத்,ஜூலை.14  - தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெலுங்கானா ஒருங்கிணைப்பு போராட்டக்குழு அறிவித்துள்ளது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி போராட்டம் மீண்டும் வலுத்து உள்ளது. தனி தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.சி.கள் ராஜினாமா செய்துவிட்டனர். அதோடு நில்லாமல் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள் பேசுகையில் ஆந்திர காங்கிரஸ் அரசியல் விவகாரத்தை கவனிக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டுமானால் ஆந்திர சட்டசபையில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று ஆசாத் கூறியதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சட்டசபையில் ஆந்திர ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும்போது ஒருமித்த கருத்துடன் எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும் என்று ஆசாத்திற்கு அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்தநிலையில் தனி தெலுங்கானா மாநிலத்தை மத்திய அரசு விரைவில் அமைக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெலுங்கானா போராட்டக்குழு அறிவித்துள்ளது. இதனால் தெலுங்கானா பகுதி வழியாக செல்லும் ரயில்கள் வேகமாக செல்லாமல் குறைந்த வேகத்தில் செல்லும். அல்லது சில ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் மறியல் போராட்டத்தால் தெலுங்கானா பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனி தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும் போராட்டத்தில் தீவிரமாக குதித்துள்ளனர். போராட்டம் வலுத்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் மத்திய அரசு  குழப்பத்தில் இருக்கிறது. தனி தெலுங்கானா அமைத்தால் அந்த மாநிலத்திலும் ஆந்திராவிலும் கட்சிக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்வதற்கான வழிவகைகளை காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்துக்கொண்டியிருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்