முக்கிய செய்திகள்

கலாநிதி மாறன் 26ம் தேதி ஆஜராக அனுமதி

Image Unavailable

 

சென்னை, ஜூலை 14 - சன் பிக்சர்ஸ் தொடர்பான குற்றச்சாட்டில் சென்னை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கலாநிதி மாறனுக்கு சம்மன் வழங்கப்பட்டது. இதில் கலாநிதி மாறன் சார்பில் 26 ம் தேதிக்கு பிறகு அவர் போலீஸ் விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை போலீசார் ஏற்றுக்கொண்டனர். சன்பிக்சர்ஸ் சார்பில் ஏராளமான திரைப்படங்கள்  வெளியிடப்பட்டன. இந்த திரைப்படங்களை சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மிரட்டி, குறைந்த விலைக்கு வாங்கியதாக ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக தீராத விளையாட்டுப்பிள்ளை என்ற படத்தின் சேலம் விநியோக உரிமையாளர் செல்வராஜ், தனக்கு சன்பிக்சர்ஸ் சக்சேனா ரூ. 82 லட்சத்து 59 ஆயிரம் பணம் தராமல் மிரட்டுவதாக சென்னை கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சக்சேனா மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த புகாரைத் தொடர்ந்து சேலம் சண்முகவேல் என்பவர் சக்சேனா மீதும் அவரது நண்பர் அய்யப்பன் மீதும் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அய்யப்பனும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் சக்சேனா மீது சினிமா தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான இத்தேஸ் ஜபக் என்பவர் கோடம்பாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். இதில் தன்னை மிரட்டி ரூ. 2 கோடியே 40 லட்சம் பறித்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட சக்சேனா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து சக்சேனா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சன் டி.வி.யின் நிர்வாகி கலாநிதிமாறனை விசாரிக்க  கே.கே.நகர் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது. நேற்று காலை அவர் கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பாக காவல் நிலையம் வந்த வழக்கறிஞர்கள், கலாநிதி மாறன் 26 ம் தேதிவரை  பல்வேறு நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டுள்ளதாகவும், எனவே அதன்பிறகு போலீஸ் விசாரணைக்கு வருவதாகவும் தெரிவித்தனர். இதை போலீஸ் தரப்பில் ஏற்றுக்கொண்டதால் கலாநிதி மாறன் 26 ம் தேதிக்கு பிறகு கே.கே.நகர் காவல்நிலையம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: