முக்கிய செய்திகள்

வட மாநிலங்களுக்கு நேரடியாக ரயில்களை இயக்க கோரிக்கை

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.14 - தென் மாவட்டங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு நேரடியாக எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையம் வந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் தீபக்கிருஷ்ணனை ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, விஜயராகவன் ஆகியோர் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது, மதுரையிலிருந்து சென்னை வரையிலான தூரந்தோ அதிவிரைவு வண்டி விரைவில் இயக்கப்படும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த வண்டி மதுரையிலிருந்து திருச்சி,கரூர், ஜோலார்பேட்டை வழியாக சென்னை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரமும், பயண தூரமும் அதிகமாகிறது. அதிக கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து நேர்வழியாக திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   தென்மாவட்டங்களை சேர்ந்த ஏழை மக்கள் ஏராளமானோர் வட மாநிலங்களில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு நேரடையாக வடமாநிலம் செல்லவசதி இல்லாததால் சென்னை சென்று அங்கு காத்துகிடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. தற்போது தூத்துக்குடியிலிருந்து மட்டும் மைசூருக்கு ஒரு ரயில் உள்ளது. இதை மேலும் அதிகரித்து பகல் நேரத்தில் பெங்களூருக்கு ஒரு ரயில் இயக்க வேண்டும். மேலும் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு நேரடியாக செல்லும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். ரயில் கால அட்டவணை புத்தகம் முழுமையாக பொதுமக்களுக்கு கிடைக்க வில்லை. இந்த புத்தகம் அனைத்து ரயில் நிலையங்களிலும் கிடைக்க செய்ய வேண்டும். மேலும் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை விரைவு வண்டி, டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில்களில் தரமான உணவு கிடைப்பதில்லை. எனவே இந்த ரயில்ககளில் தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: