முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை மறைக்கவே ஊடகங்களின் மீது தி.மு.க. குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி, ஜூலை 15 - ஊழலை மறைக்கவே ஊடகங்களின் மீது தி.மு.க. குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறது என்று தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.

தூத்துக்குடியில் 20 கி.மீ சுற்றளவுக்கு நிலக்கரியை எரித்து உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங்கள் மேலும் துவங்குவதை மாநில அரசு தடை செய்ய வேண்டும். மேலும் தூத்துக்குடியில் நிலக்கரியை எரிபொருளாக கொண்டு இயங்கவுள்ள அனல் மின் நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்.

மத்திய அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மதிப்பீட்டின் படி தூத்துக்குடியை சுற்றி கந்தக ஆக்ஸைடுகள், காற்றில் உள்ள திடமாசுகள் சுவாசிக்கப்படும் மாசுகள் அபாய விளிம்பில் உள்ளன.

ஆகவே செயல்படும் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாசுக்கட்டுப்பாட்டு கருவிகளை அமைக்க வேண்டும். காற்றில் கலக்கும் திடமாசுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். மேலும் புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்க கூடாது என்றார்.

மேலும் ஊழலை எதிர்த்து தேசிய அளவில் இடது சாரி கட்சிகள் பி.எஸ்.பி, ஆர்.எஸ்.பி ஆகிய கட்சிகள் இணைந்து 15 ந் தேதி முதல் 22 ம் தேதி வரை தாலுகா தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்துகின்றோம். லோக்பால் மசோதாவில் பிரதமரும் உட்படுத்தப்பட்ட வேண்டும். நீதித்துறை சம்பந்தப்பட்ட புகார்களுக்கு நீதித்துறை ஆணையம் ஏற்படுத்தி நீதிபதிகளின் தவறை விசாரிக்கலாம். ஆளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் இவர்களின் கூட்டணிதான் நாம் இன்று கேள்விப்படும் 2ஜி, ரிலையன்ஸ் 45 ஆயிரம் கோடி எண்ணை ஊழல், காமன்வெல்த் ஊழல், இஸ்ரோ ஊழல் ஆகியவை நடைபெற இவர்கள்தான் காரணம். கருப்பு பண விவகாரத்தில் அரசே எதிரி போல செயல்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட் கூறும் அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. 

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் அலுவலகம், நீதித்துறை பிரனாப் முகர்ஜி ஆகியோர் சம்பந்தம் இல்லை என்பதை ஏற்க முடியாது. சாதிக் மச்சாது தற்கொலை தற்போது கொலையாக மாறியுள்ளது. பாவ்லாவின் 214 கோடி ரூபாய் எங்கே என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சுப்ரீம் கோர்ட் இல்லாவிட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது மறைக்கப்பட்டு விடும். திமுக தலைவர் ஊடகங்களின் மீது குற்றம்சாட்டி ஊழலை மறைக்க பார்க்கிறார். அப்படியென்றால் தயாநிதி மாறானை ஏன் ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். தயாநிதி மாறன் மீது சிபிஜ குற்றச்சாட்டு தாமதமான நடவடிக்கை. அதுபோல கனிமொழியின் மீது குற்றப்பத்திரிக்கையை தேர்தலுக்கு முன்பே வெளியிட்டிருக்கவேண்டும். அதிமுக ஆட்சியின் துவக்கமே நல்ல துவக்கமாக உள்ளது. இலவச அரிசி திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் வரவேற்க கூடியது. காப்பீட்டு திட்டத்தை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அளிக்காமல் அரசின் பொதுத்துறைக்கு அளிக்க வேண்டும். இதில் அரசு மருத்துவமணைகளை இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்