முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு விபத்தை எதிர்கொள்வது எப்படி? கல்பாக்கத்தில் ஒத்திகை

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

கல்பாக்கம், ஜூலை.15 - அணு விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கல்பாக்கத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 நாட்களாக பேரிடர் மேலாண்மை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓர் அணுசக்தி நிறுவனத்திலிருந்து எதிர்பாராதவிதமாக வெளிப்படும் கதிரியக்கமே அணு விபத்து எனப்படும். அணுக்கதிர் உடலில் படிவதை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, கதிரியக்கத்தின் தீவிரத்தை குறைப்பது எப்படி? கதிரியக்கம் எவ்வாறு மனித உடலை பாதிக்கிறது? இயற்கை சூழலில் எற்படும் கதிரியக்கம் என்ன? அணு விபத்து ஏற்பட்டால் நாம் மேற்கொள்ள வேண்டியது என்ன? அணு விபத்து ஏற்பட்டுள்ளது என நாம் அறிய நேரும்போது என்ன செய்ய வேண்டும்? 

வெளியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை தொடர்பு கொண்டு பேசலாமா, எந்த வகையான செயல்களில் கவனம் கொள்ள வேண்டும், வீட்டின் உட்புறம் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும், மாற்று இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன போன்ற விவரங்களுக்கான செயல்முறைகள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அணு விபத்து நேரங்களில் அமைதி காக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வானொலி, தொலைக்காட்சி மற்றும் ஒலி பெருக்கி மூலம் தரும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அருகில் இருக்கும் வீடு அல்லது பொதுமக்களுக்கான கான்கிரீட் கட்டிடத்திற்குள் சென்று அங்குள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு உள்ளேயே இருக்கவும். புகலிடங்களில் தங்குவதற்காக அமைதியாக வெளியேறி தரப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். எரிவாயு அடுப்பு, சிலிண்டரை அணைத்து விட்டு மின்சார பிளக்குகளை அகற்றிவிட வேண்டும். 

அருகில் உள்ள அக்கம் பக்கத்தினரையும் அழைத்து செல்ல வேண்டும். புகலிடத்திற்கு சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்ல வேண்டும். அடிப்படை தேவையான பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். அதாவது வானொலி, டார்ச் விளக்கு, பணம், வங்கி புத்தகம், மாற்று உடை, முகமூடி, கைக்குட்டை, அவசரத் தேவைக்கான உணவு மற்றும் குடிநீர். எல்லா கதவுகளையும் பூட்டி விட வேண்டும். 

உடல் ஊனமுற்றோர் குறித்த தகவல்களை  உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்கள் புகலிடம் செல்ல உதவவும். செல்ல பிராணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தந்து அவை வீட்டின் உள்ளே இருக்க செய்யவும். காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தரும் அறிவுரைகளை பின்பற்றவும் என்பதை பற்றிய செயல் விளக்கமுறை செய்து காண்பிக்கப்பட்டது. 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பேரிடர் மீட்புபடை விரைவில் அமைக்கப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணை தலைவர் சசிதர ரெட்டி கூறினார். 

மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் தக்க பாதுகாப்பு வழங்கும் என்று எடுத்துரைத்தார். இப்பாதுகாப்பு ஒத்திகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிவசண்முகராஜா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசீஸ் சட்டர்ஜி, பயிற்சி கலெக்டர் ஆர்.லலிதா, கோட்டாட்சியர் வீரப்பன், செங்கல்பட்டு ஆ.டி.ஓ. ஆலின் சுனேகா, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் (காவல்) மனோகரன், மதுராந்தகம் டி.எஸ்.பி. தணிகைவேல், மாமல்லபுரம் டி.எஸ்.பி. முத்துராமலிங்கம், காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் (கோட்ட துணை) சுப்பிரமணி, தாசில்தார்கள் திருக்கழுக்குன்றம் தாசில்தார் மல்லிகா, செங்கல்பட்டு தாசில்தார் வெங்கடேசன், குன்னத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பின்னர் பொதுமக்கள் 100-க்கும் சென்னை அணுமின் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏற்றப்பட்டு வெங்கம்பாக்கம், அணுபுரம், வீராணம் பைபாஸ், கொத்திமங்களம், ஆசிரியர் நகர் வழியாக திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் பிளஸ்சிங் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் ஆசிரியர் நகர் அருகே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு உறுப்பினர் மேஜர் ஜெனரல் தத்தா மற்றும் பேரிடர் மேலாண்மை பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு கதிர் வீச்சு உடலில் பரவினால் எவ்வாறு செயல்பட வேண்டும் என செயல் விளக்கங்களை செய்து காட்டினர். 

முதல் பேருந்தில் இறக்கப்பட்ட பேருந்தில் ஒருவர் மீது  ரேடியேசன் மானிட்டர் கருவி மூலம் கதிர்வீச்சு உள்ளதா என சோதித்தனர். பின்னர் அவர்கள் உடைகளை கழற்றி பாதுகாப்பாக உள்ள ஒரு பெட்டியில் போட சொன்னார்கள். பின்னர் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறான செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago