முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சக்சேனா காவலில் எடுப்பது தொடர்பான மனு மீது தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.15 - மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட சக்சேனா மற்றும் கூட்டாளி அய்யப்பன் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கே.கே.நகர் போலீசார் மனு அளித்தனர். அதன் மீது இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. நித்தியானந்தா- ரஞ்சிதா புகாரின் மீதும் சக்சேனா கைது செய்யப்படுவார் என தெரிகிறது. சேலத்தை சேர்ந்த பட அதிபர் செல்வராஜ், மற்றொரு பட அதிபர் ராமலிங்கம், கோடம்பாக்கத்தை சேர்ந்த பட அதிபர் உள்பட பல்வேறு சினிமா துறையை சார்ந்தவர்கள் சக்சேனா மீது பண மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு புகார்களை அளித்திருந்தனர். இதனையொட்டி கே.கே.நகர் போலீசார் 2 தனி தனி வழக்குகளிலும், கோடம்பாக்கம் போலீசார் ஒரு வழக்கிலும் கைது செய்தனர். 

முதல் வழக்கில் சக்சேனாவை போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் சக்சேனா பல தகவல்களை அளித்ததன் பேரில் கலாநிதி மாறனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். முதல் வழக்கில் சக்சேனா ஜாமீன் கேட்டு மனு செய்தது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. 2-வது மற்றும்3-வது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நடிகை ரஞ்சிதா சன்நெட்வொர்க்குக்கு எதிராக புகார் அளித்தார். நித்தியானந்தாவின் மேனேஜர் அளித்த புகாரின் பேரில் மேலும் குற்றச்சாட்டுகள் குவிகிறது. 

இதனிடையே கோடம்பாக்கம் போலீசார் 3-வது வழக்கின் பேரில் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை 17 வது கோர்ட் மாஜிஸ்திரேட் பிரியா முன்பு மனு செய்தனர். இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. மேலும் சக்சேனாவின் கூட்டாளி அய்யப்பனை முதல் வழக்கில் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை 23 வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ஐயாசாமியிடம் மனு அளித்துள்ளனர். இதன் மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் ஐயாசாமி 2 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தார். இதன்படி அய்யப்பனை போலீசார் 2 நாள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து விட்டு மீண்டும் 16-ந் தேதி மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள்.   

இதனிடையே முதல் வழக்கில் ஜாமீன் மனு கேட்டு உயர்நீதிமன்ற செசன்ஸ் கோர்ட்டில் சக்சேனா மனு அளித்தார். அதன் மீது நேற்று விசாரணை நடந்தது. தீர்ப்பு இன்று ஒத்தி வைக்கப்பட்டது. சக்சேனா மீது நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தாவின் மேனேஜர் அளித்த புகாரையொட்டி மேலும் வழக்குகள் பதியப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்