முக்கிய செய்திகள்

முதல்வர் அறிவுறுதலின்படி ஜல்லி விலை குறைப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.15 - முதல்வர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்களின் சங்கத்தினர் தலைவர் கே.ரத்தினசேகர் தலைமையில் கோட்டையில் சந்தித்தனர். அப்போது செங்கல் லோடு ஒன்றுக்கு ரூ.3000 குறைப்பதாக உறுதியளித்தார்கள். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (14.7.2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் கே. ரத்தினசேகர்  சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது,  பொது மக்களுக்கு சிரமமின்றி சரியான விலையில் செங்கல் கிடைத்திட  தமிழ்நாடு முதலமைச்சரின் முந்தைய ஆட்சி காலத்தில் (2001-2006) வருடாந்திர கட்டண முறை கொண்டுவரப்பட்டது என்றும், அதேபோன்று தற்போது ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் கட்டும் முறையை மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்தமாக கட்டணம் செலுத்திட ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தார்கள்.  

தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,  கட்டுமானப் பொருள்களின் விலை அதிகமாக உள்ள நிலையில் செங்கல் விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்றும், அதனால் பொது மக்களின் நலன் கருதி செங்கல் விலையினை குறைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்.  தமிழக முதலமைச்சர் அறிவுரைக்கிணங்க செங்கல் விலையை தற்போதைய விலையிலிருந்து உடனடியாக லோடு ஒன்றுக்கு 3000 ரூபாய் அளவிற்கு குறைத்து கட்டுமானத் தொழில் வளர்ச்சிக்கும், அரசுக்கும் உறுதுணையாக இருப்பதாக தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் தமிழக முதலமைச்சரிடம் உறுதியளித்தார்கள்.

இந்தச் சந்திப்பின்போது தொழில் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநிலப் பொருளாளர் எம். சின்னசாமி, மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.பி. ஜெயராஜ், மாநிலத் துணைத் துலைவர் கே.பி.மோகனசுந்தரம், ஆலோசகர் வீரபாண்டி விஜயன், மாநில உதவித் தலைவர் தசரதன் மற்றும் கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்க செயலாளர் தர்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. சின்னசாமி சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது கல்குவாரிகளில் தற்போது நடைமுறையிலுள்ள நடை சீட்டு முறைக்குப் பதிலாக பரப்பளவு அடிப்படையில் ஆண்டு குத்தகைத் தொகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தொழில் செய்வதிலுள்ள சிரமங்கள் குறையும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார்கள். 

மேலும், கல்குவாரிக்குத் தேவையான வெடிமருந்து பொருட்களை அரசு வெடிமருந்து நிறுவனத்திடமிருந்து முகவர் இன்றி மாவட்ட சங்கம் மூலம் கிடைப்பதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர்.

கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கட்டுமானப் பொருள்களின் விலை அதிக அளவில் உள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி கருங்கல் ஜல்லி விலையினை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.  தமிழக முதலமைச்சர் அறிவுரைக்கிணங்க கருங்கல் ஜல்லி 40 மி.மி., 20 மி.மி., 12 மி.மி. மற்றும் 6 மி.மி. ஆகியவற்றின் விலையை தற்போதைய விலையிலிருந்து உடனடியாக லோடு ஒன்றுக்கு 700 ரூபாய் அளவிற்கு குறைத்து கட்டுமானத் தொழில் வளர்ச்சிக்கும், அரசிற்கும் உறுதுணையாக இருப்பதாக தமிழக முதலமைச்சரிடம் சங்கத்தினர் உறுதியளித்தார்கள்.  

இந்த சந்திப்பின் போது தொழில்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர். ஜெயயராமன், மாநில பொருளாளர்  கே.பாலசுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.கே.யோகநாதன், கரூர் மாவட்ட தலைவர் எம்.பழனியப்பன், சேலம் மாவட்ட செயலாளர் ஞ.ராஜா மற்றும் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்  பீட்டர்பால் ஆகியோர் உடனிருந்தனர். 

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: