முக்கிய செய்திகள்

ஏர்-செல் விவகாரம்: 3 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை15 - ஏர்-செல் நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்திற்கு கைமாறியது தொடர்பாக வெளிநாட்டு வங்கி அதிகாரிகள் 3 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. தயாநிதிமாறன் தொலை தொடர்புத் துறை மந்திரியாக இருந்த போது ஏர்-செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகள் அவரது பேரில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதற்கான பணப்பரிவர்த்தனை ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலம் நடைபெற்றது. இதையடுத்து அந்த வங்கியின் 2 அதிகாரிகள் மற்றும் வங்கியின் தணிக்கை அதிகாரி ஒருவர் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது.  அதன்படி வங்கி அதிகாரிகள் 3 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தினர். அப்போது மேக்சிஸ் நிறுவன பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை தருமாறு ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்று வங்கி அதிகாரிகள் கூறிவிட்டனர். இந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக பெறப்படும் ஆவணங்கள், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் நம்புகின்றனர்.

விசாரணை குறித்து வங்கியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஏர் -செல் மற்றும் மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையே வங்கி மூலம் நடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர். அவர்களது விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்தோம் என்றார். சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் தரிணிமிஷ்ரா கூறுகையில், வங்கி அதிகாரிகள் நாங்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்துக்கும் திருப்திகரமான பதிலை அளித்தனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: