முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 முஜாகிதீன் தீவிரவாதிகள் உட்பட பலரிம் விசாரணை

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூலை.16 - மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் துப்பு கிடைக்காதா என்று முயற்சித்து வரும் அம்மாநில போலீசார் நேற்று கைது செய்யப்பட்ட 2 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் உட்பட ஏராளமான நபர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். 

மகராஷ்டிர மாநில தீவிரவாத ஒழிப்பு போலீசாரும், மும்பை குற்றப் பிரிவு போலீசாரும் ஏராளமான நபர்களிடம் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி கேள்விக்கணைகளை தொடுத்தனர். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தலைமறைவு தாதாக்களிடம் தொடர்புடையவர்கள் என ஏராளமானோரிடம் இந்த விசாரணை நடந்தது. ஆனால் எத்தனை பேரிடம் விசாரணை நடத்தினோம் என்பதை சொல்ல முடியாது என்று தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இருப்பினும் விசாரிக்கப்பட்ட நபர்களில் இருவர் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், நாங்கள் சரியான திசையில்தான் போய்க் கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இந்த விஷயத்தில் மாநிலம் முழுவதும் உள்ளவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்த மிக உயர்ந்த தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்தியிருக்க முடியாது என்றே நாங்கள் கருதுகிறோம். 

எனவே மக்கள் தரும் தகவலையே நாங்கள் நம்புகிறோம். எனவே யார் தகவல் கொடுத்தாலும் அந்த தகவல் உடனடியாக சரி பார்க்கப்படும். அப்போதுதான் எங்களுக்கு துப்பு கிடைக்கும் என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார். மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மகராஷ்டிர தீவிரவாத ஒழிப்பு போலீசார் 2 இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தினரை கைது செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் முகமது மொபின்கான்(32). மற்றொருவன் அவனது உறவினர் அயூப்ராஜா ஷேக்(28). இவர்கள் இருவரும் புறநகர் பகுதியில் இருந்து ஆயுதங்களோடு கைது செய்யப்பட்டார்கள். 2008 ம் ஆண்டு குஜராத் மாநிலத்திலும் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அப்போது அந்த சம்பவத்தில் 56 பேர் பலியானார்கள். 200 பேர் காயமடைந்தனர். அந்த சம்பவத்தில் குண்டு வெடிக்க பயன்படுவதற்கு இந்த 2 தீவிரவாதிகளும் வாகனங்களை கொடுத்து உதவியவர்களாம். இப்போது ஒரு தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 

இந்தியாவின் பொருளாதார தலைநகரமும், மகராஷ்டிர மாநிலத்தின் தலைநகரமுமான மும்பையில்தான் அடிக்கடி இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. இது வரைஆயிரக்கணக்கானோர் அங்கு பலியாகி விட்டார்கள். 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தில் சுமார் 168 பேர் பலியானார்கள். தற்போது மும்பையின் ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர் போன்ற பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் பலியாகி விட்டனர். 130 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூனும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஏற்கனவே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்