முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் அதிகார போதை தலைக்கேறிவிட்டது: நாராயணசாமி

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூலை.16 - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அதிகார போதை தலைக்கேறிவிட்டது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- மும்பையில் சில தினங்களுக்கு முன்பு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது. ஆனால் பிற கட்சியினர் ஆறுதல் கூட சொல்லவில்லை. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் மக்களுக்காக பாடுபடும். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். நான் பெரியவனா? நீ பெரியவனா? என்பதற்கு இப்போது நேரமில்லை. இடமுமில்லை. சோனியாகாந்தியின் ஆசி இருந்தால் தான் ஹீரோ. இல்லாவிட்டால் ஜீரோ. புதுவையில் காங்கிரஸ் தான் பலமான கட்சி. நேற்று அடித்த காற்றில் சிலர் மேல சென்று விடலாம். ஆனால் அவர்கள் மீண்டும் கீழே வரலாம். 

புதுவையில் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியது. 10 ஆண்டுகள் புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். மக்கள் தீர்ப்பை மதித்து காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியது. 

ஆனால் இவர்கள் பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள். கடந்த 21/2 மாதத்தில் அதிகார போதை தலைக்கேறி செயல்பட்டு வருகிறார்கள். அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகின்றனர். 

ஏற்கனவே 5 ஆயிரம் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். தற்போது பாப்ஸ்கோவில் பணியாற்றிய 480 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இப்படி ஏன் வீட்டுக்கு அனுப்புகிறார்கள்? என்று விசாரித்தால் அவர்கள் தொகுயை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த செயலை செய்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. பணி நிரந்தரம் செய்வார்கள் என்று நம்பித்தான் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் அந்த மக்களை கண்ணீரில் அழ வைத்துள்ளனர். அந்த கண்ணீர் சும்மா விடாது. 

மத்திய அரசின் திட்டமான 35 கிலோ திட்டத்தைதான் தங்களுடைய திட்டம் போல நிறைவேற்றி உள்ளனர். ஆட்சிக்கு வந்து 3 மாத மாகியும் சிவப்பு மற்றும் மஞ்சள் ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. பென்சன் தொகை பெற்று வந்த 20 ஆயிரம் பேரை நீக்கிவிட்டு அதில் கிடைத்த நிதியின் மூலம் மற்றவர்களுக்கூ ரூ. 1000 பென்சன் வழங்கி உள்ளனர். 

டெல்லிக்கு சென்றால் தான் நிதி கிடைக்கும். சேலத்திற்கு சென்றால் நிதி கிடைக்காது. எப்போதும் நெற்றியில் விபூதி பட்டையிட்டாலும் நிதி வராது. முதல்வர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ரூ.50 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும். ஆனாலும் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும். 

சென்டாக் மாணவர்களுக்கு நிதி உதவி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த அரசு மைனாரிட்டி அரசு. சபாநாயகரை தவிர்த்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பலம் 14 ஆக உள்ளது. தராசு எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயலாம். காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். 

மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி போராட வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அரசு இருப்பதால்தான் டெல்லிக்கு ரெயில் விடப்பட்டுள்ளது. கோவைக்கும், மும்பைக்கும் இடையே ரெயில் விடப்படும். சில பத்திரிக்கையாளர்கள் காங்கிரசார் குழப்பத்தில் இருப்பதாக எழுதுகிறார்கள். எங்களிடையே எந்த குழப்பமும் இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சோனியாகாந்தியின் விசுவாசிகள். நமது கூட்டணியில் தான் தி.மு.க. உள்ளது. 

ஆனால் புதுவை தி.மு.க. நிர்வாகிகள் சிலர் மாற்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்த பிரணாப் முகர்ஜி கூட்டணி பலமாக உள்ளது என்று தெரிவித்தார். புதுவை தி.மு.க.வினருக்கு அவர்களது தலைவரே பதில் சொல்லி விட்டார். காங்கிரஸ் தோல்வியை கண்டு துவளாது. கட்சிக்குள் போராடினால் பலவீனமாகி விடுவோம். ஆட்சியின் தவறுகளை எதிர்த்து போராட வேண்டும். அப்போது தான் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் பழக்கம் இல்லை. ஒற்றுமையாக இருந்து கட்சியை பலப்படுத்த வேண்டும். தொண்டர்களுக்க மனக்குறைகள் இருந்தால் கட்சி தலைவரையோ, என்னையோ, மாநில பொறுப்பாளரையோ, அகில இந்திய தலைவரையோ சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 

ஒற்றுமையாக இருந்து கட்சியை பலப்படுத்துவோம் என்று காமராஜர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம். காமராஜர், ராகுல், சோனியா ஆகியோரின் பிறந்த நாளை முப்பெரும் விழாவாக கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்