முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் காங்கிரசார் மோதல்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூலை.16 - புதுவையில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் காங்கிரசாரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நாற்காலிகள் வீசப்பட்டன. புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கட்சி அலுவலகத்தில் நேற்று காலை கொண்டாடப்பட்டது. காலை 9.15 மணிக்கு விழா தொடங்கியது.  விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் முதல்வர்கள் வைத்திலிங்கம், ராமசாமி, எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலாஜி, நீலகங்காதரன், மாரிமுத்து மற்றும் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

விழா தொடங்கியதும் தலைமை தாங்கிய ஏ.வி.சுப்பிரமணியன் பேசும்போது, காமராஜரின் எளிமை குறித்து பேசினார். மேலும் காமராஜரின் எளிமையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதைதொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன் பேசும்போது, எதிர்க்கட்சி தலைவர் பதவியை எதிர் நோக்கி காத்திருக்கும் முன்னாள் அமைச்சர்களே என்று பேசத்தொடங்கினார். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் வெற்றிச்செல்வன் குறுக்கிட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் இருக்கும் போது இருவரை மட்டும் எப்படி குறிப்பிட்டு பேசலாம்? என்றார். இது போன்ற செயல்களினால் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது என்றார். 

இதையடுத்து உருளையன்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் அப்துல்ரகுமான், காங்கிரஸ் நிர்வாகி வீரமுத்து ஆகியோர் இவ்வாறு எப்படி பேசலாம்? என்று கூறி வெற்றிச்செல்வனை நோக்கி ஓடிவந்தனர். 

அப்போது இருதரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். நாற்காலிகளும் வீசப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த சமயத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் தொடர்ந்து கூச்சல் நிலவியது. அப்போது மத்திய அமைச்சர் நாராயணசாமி, இங்கு நடக்கும் சம்பவங்களை பத்திரிக்கையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார். 

இதையடுத்து வெற்றிச்செல்வன் பேசும்போது, பத்திரிக்கை செய்திக்காக இவ்வாறு பேசவில்லை என்றும், கட்சியின் குறைகளை தான் எடுத்துக் கூறியதாக தெரிவித்தார். 

இதைதொடர்ந்து வெற்றிச்செல்வனை விழாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் கூறினர். இதனால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. 

இதையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமி மைக்கை எடுத்து பேசினார். அவர் பேசும்போது, நமது கட்சியில் இருந்து ஒருவர் வெளியேறி புதிய கட்சி தொடங்கி காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகிறார். நமக்குள் ஏன் பிரச்சனை வர வேண்டும்? அனைவரும் ஒற்றுமையாக இருந்து விழாவை நடத்த வேண்டும். மேலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி வளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதைதொடர்ந்து அனைவரும் அமைதியானார்கள். விழா தொடர்ந்து நடைபெற்றது. காமராஜர் குறித்து நிர்வாகிகள் புகழ்ந்து பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்