முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 16 -​ திடீர் நகர் மற்றும் வியாசர்பாடியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அல்லிக்குளம், திடீர் நகர் (நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகில்) பகுதியில் 300 குடிசைகளும், வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் 22 குடிசைகளும் திடீர் என தீ பற்றி எரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட உடன் பொதுமக்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மூலம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் நேற்று தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடிசை வாழ் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மேலும், பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரண உதவிகள் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். 

இதுகுறித்து துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.மதுமதி சென்னை மாநகராட்சியின் சார்பாக திடீர் நகர் பகுதியில் உள்ள தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு 2,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. அதேபோன்று வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் 32 குடும்பங்களுக்கு 150 உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. கண்ணப்பர் திடல் அருகில் உள்ள மாநகராட்சி சமுதாய நல கூடத்திலும், சென்னை பள்ளியிலும் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவக்குழு மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி நிவாரண மையங்களில் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.   

மேலும், மாவட்ட வருவாய்த்துறை மூலம் உடனடியாக தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையும், இலவச வேட்டி- சேலையும் உடனடியாக வழங்குமாறு அமைச்சர் வருவாய்த்துறை அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன்படி கணக்கெடுக்கும் பணி முடிக்கப்பட்டு, நிவாரண உதவிகள் வழங்கும் பணி நடைபெறுகிறது. 

இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினரும், வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான நா.பாலகங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்