கருணாநிதி தூண்டுதலின் பேரில் ஜெயலலிதாவின் தொலை பேசி ஒட்டுகேட்பு

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
jayalalitha3 1

 

புதுடெல்லி,மார்ச்.- 1 - தேர்தல் தோல்வி பயத்தால் ஜெயலலிதாவின் தொலைபேசி உரை ஒட்டுக்கேட்கப்படுகிறது. இது முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலால் நடைபெறுகிறது என்று அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை நேற்று லோக்சபையில் பிரச்சினையை எழுப்பினார். இதனால் சபையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.  பாராளுமன்ற லோக்சபை நேற்று கூடியதும் அ.தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை எழுந்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கருணாநிதியின் தூண்டுதலின்பேரில் எங்கள் தலைவரும் அ.தி.மு.க. வின் நிரந்தர பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் தொலைபேசி மற்றும் செல்போன் உரைகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன.

 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்ற பயத்தால்தான் இந்த மாதிரி ஒட்டுக்கேட்கப்படுகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் விரிவான விளக்கத்துடன் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார். தம்பித்துரையின் இந்த பேச்சுக்கு இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் ஆதரித்தன. அதேசமயத்தில் தி.மு.க. வை சேர்ந்த உறுப்பினர்கள் சேர்ந்து தம்பிதுரை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சபை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு  குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. விவாதத்தில் அ.தி.மு.க. மாநிலங்களவை குழு தலைவர் மைத்ரேயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் ஆதாயம் அடைந்துள்ளனர். அதனால் அவரது குடும்பத்தினர்களிடம் விரிவான முறையில் விசாரணை நடத்த வேண்டும். கலைஞர் தொலைக்காட்சிக்கு டைனாமிக்ஸ் பல்வா நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடி நிதி உதவி கிடைத்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் மைத்ரேயன் கேட்டுக்கொண்டார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினையை கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் கட்சி தலைவரும் அ.தி.மு.க. வின் நிரந்தர பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தொடர்ந்து எழுப்பியதோடு இந்த ஊழல் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்தார். ஆனால் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ராஜ்யசபை  உறுப்பினர்களில் அ.தி.மு.க. வை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இடம்பெறவில்லை என்று மைத்ரேயன் குற்றஞ்சாட்டினார். மைத்ரேயனுக்கு ஆதரவாக இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், தெலுங்குதேச கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர். தி.மு.க. வை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பம் ஏற்படவே சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: