முக்கிய செய்திகள்

சக்சேனா மீண்டும் ஒரு வழக்கில் கைது

புதன்கிழமை, 20 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.20 - சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் புகார்கள் குவிகிறது. நுங்கம்பாக்கம் போலீசார் மேலும் ஒரு மோசடி வழக்கில் சக்சேனாவை கைது செய்துள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- அருள் மூர்த்தி என்பவர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் தான் ஒரு சிந்தனை செய் என்ற பெயரில் படம் எடுத்ததாகவும் பாதிபடம் எடுத்த நிலையில் சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் மற்றும் அம்மா ராஜேந்திரன் ரூ.22 லட்சத்திற்து விலை பேசியதாகவும் பட உரிமையை விற்ற பிறகு தனக்கு ரூ.11 லட்சம் மட்டும் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீது 11 லட்சம் பணத்தை கேட்டபோது கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி நுங்கம்பாக்கத்திலுள்ள போர் பிரேம் என்ற அலுவலகத்திற்கு தன்னை வரவழைத்த சக்சேனா  அம்மா ராஜேந்திரன் மற்றும் அய்யப்பன் தன்னிடம் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வழங்கியதாகவும் மீதி ரூ.5 லட்சத்தினை கேட்டபோது அவ்வளவுதான் தரமுடியும், மீறி கேட்டால் இருக்கமாட்டாய் என்று மிரட்டி அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பயந்துபோன அருள்மூர்த்தி ரூ.6 லட்சம் காசோலையுடன் வீடு திரும்பியுள்ளார். ரூ. 6 லட்சம் காசோலையை வங்கியில் போட்டபோது அது பணமில்லாமல் திரும்பி விட்டது. தன்னை மேலும் மிரட்டிய சக்சேனா மற்றும் அய்யப்பன் மேல் அவர்கள் செல்வாக்காக இருந் நேரத்தில் புகார் அளிக்க அருள்மூர்த்தியால் முடியவில்லை.

தற்போது நுங்கம்பாக்கம் போலீசில் அருள்மூர்த்தி புகார் அளித்ததன் பேரில் போலீசார் 420, 328, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சக்சேனா, அம்மா ராஜேந்திரன் மற்றும் ஐயப்பனை கைது செய்துள்ளனர்.

இதேபோல் திருவல்லிக்கேணியை சேர்ந்த எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சி.எம்.குமரன் என்பவர் சக்சேனா மற்றும் ஜாம்பஜார் முரளி என்ற லோக்கல் தாதா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.

லயன்ஸ் கிளப் உறுப்பினரான சி.எம்.குமரன் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும், கடந்த 2009-ம் ஆண்டு தன்னை அதே பகுதியை சேர்ந்த மார்கெட் முரளி மற்றும் அவரது தம்பி ராஜா ஆகியோர் வழிமறித்து மிரட்டி தன்னிடம் உள்ள டயோட்டா லூசிரா என்ற வெளிநாட்டு சொகுசு காரை முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தரவேண்டும் என்று மிரட்டியதாகவும், முக்கிய பிரமுகர் எதைவேண்டுமானாலும் செய்வார் என்று அவரிடம் பேசு என்று போன் போட்டு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

போனில் பேசிய பிரமுகர் தான் சக்சேனா என்றும், முரளி சொல்கிறபடி காரை ஒப்படைத்துவிடு என்று மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார். தான் மறுக்கவே தன்னை டாடா சுமோ மூலம் கடத்தி மிரட்டியதாகவும் இதுபற்றி தான் புகார் அளித்தபோது ஜாம்பஜார் போலீஸ் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் புகாரை ஏற்காமல் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சக்சேனாவின் செல்வாக்கால்தான் தன் புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் மார்கெட் முரளி, சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் படத்தை தான் பார்த்ததாகவும் முரளிக்கு நெருக்கமான சந்துரு என்பவர் முரளிக்கும் சக்சேனாவுக்கும் உள்ள நெருக்கமான உறவு மற்ற விஷயங்களை கூறியதாகவும் தெரிவித்து சக்சேனா மற்றும் மார்கெட் முரளி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இணை ஆணையர் சண்முக ராஜேந்திரனிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் செந்தில் குமரனிடம் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: