முக்கிய செய்திகள்

சக்சேனா மீது குண்டர் சட்டம்: கமிஷனர் திரிபாதி பேட்டி

புதன்கிழமை, 20 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.20 - நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக 15 நாட்களில் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கமிஷனர் திரிபாதி தெரிவித்துள்ளார். சக்சேனாவை குண்டர் சட்டத்தில் அடைப்பது பற்றி விசாரணை அதிகாரி  பரிந்துரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுபற்றிய விபரம் வருமாறு:-

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.

சென்னையில் வங்கி பெண் அதிகாரி கொலையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 48 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். குற்றவாளியின் கைரேகை முக்கிய தடயமாக விளங்கி உள்ளது. ஹிலாரி கிளிண்டன் சென்னை வருவதையொட்டி சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டையில் 11 மாத குழந்தை காணாமல் போனது சம்பந்தமாக இணை ஆணையர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புகாரின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

நித்தியானந்த, ரஞ்சிதா அளித்த புகார்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. ரஞ்சிதா அளித்த புகாரின் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலம் சகோதரிகள் இரட்டை கொலை சம்பந்தமாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சில தடயங்கள் கிடைத்துள்ளது.

உட்லண்ட்ஸ் ஓட்டலில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பந்தமாக என் கவனத்திற்கு எதுவும் வரவில்லை. அப்படி வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். சக்சேனா, ஐயப்பன் இருவர் மீதும் இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சக்சேனாவை குண்டர் சட்டத்தில் கைது செய்தது சம்பந்தமாக வழக்கு விசாரணை அதிகாரிதான் முடிவு செய்யவேண்டும். கையெழுத்து போடுவது மட்டும்தான் எனது பணி. விசாரணை அதிகாரி தேவை என்று பரிந்துரைத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்வோம்.

நிலமோசடி சம்பந்தமாக இதுவரை 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கென தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கமிஷனர் திரிபாதி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: