முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிலாரி கிளிண்டன் முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.21 - தமிழக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த சாதனைகளைப்பற்றி அமெரிக்க மக்களுக்கு எடுத்துரைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு வருகை தரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் 2.10 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர், மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாடினார். அரசியல் சமூக, பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு ஹிலாரி கிளிண்டன் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் பல தடைகளைக் கடந்து முதல்வர் செய்த சாதனைகளையும் அவர் பாராட்டினார். பெரும் வெற்றிக் கதைகளை கொண்ட பெரும் ஆளுமைமிக்க தலைவரான ஜெயலலிதாவுடன் பேசுவதற்கு ஙிஹிலாரி ஆவல் தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா நினைவு கூர்ந்தார். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரும் வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா திகழ்கிறது என்றும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொழில் சேவைகளை 200-10-ல் இந்தியா ஏற்றுமதி செய்தது. 2009-ல் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேவைகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது என்றும் எதிர்காலத்தில் அமெரிக்க சேவைகளின் இந்திய இறக்குமதி அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் பிரிவில் அமெரிக்கா முதலீடு செய்வதற்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.

இதுபோன்ற தொழில்துறைகளில் தமிழ்நாடு - அமெரிக்கா இரு தரப்பும் இணைந்து பணியாற்ற முடியும். இதுகுறித்த கொள்கையை உருவாக்குதல், சிறு மற்றும் மத்திய நிறுவனங்களை பயன்படுத்துதல், உலக சப்ளை சங்கிலி நிர்வாக முறைமையை ஆட்டோமோட்டிவ் துறையில் பலப்படுத்தல் குறித்து முதல்வர் விவாதித்தார்.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள விரிவான வாய்ப்புகள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

தலா 300 மெகாவாட் உற்பத்தி செய்யும் 10 சூரிய சக்தி மின்சார பூங்காக்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதையும் முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசும் அமெரிக்க அரசும் இந்த துறையில் இணைந்து செயலாற்ற முடியும். இத்துறையில் அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

அறிவுத்துறையில் - குறிப்பாக தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2011-2020 காலகட்டத்தில் 10 முதல் 12 மில்லியன் பணிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 4 மடங்காக உயரும்  என்பதால் அது உறுதிபடுத்தப்படும். இது அறிவுத்துறையை மேம்படுத்த தமிழக அரசும், அமெரிக்க அரசும் கைகோர்த்து செயல்பட முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதுபோன்ற இணைந்த செயல்திட்டங்களில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதாக ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

தொழிற்துறை வளர்ச்சியில் சாலைபோக்குவரத்து பெரும்பங்கு வகிக்கின்றது. 2.1 லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு 15-20 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 2020-ம் ஆண்டு வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் எடுத்துக் கூறினார். சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பெரும் வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழக அரசும், அமெரிக்க அரசும் இணைந்து செயல்பட முடியும் என்று முதல்வர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் என்ற தகவலை ஹிலாரி கிளிண்டன் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் செயல்திறனுள்ள தலைமையில் இதுபோன்ற பல பெரிய முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்வதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாக ஹிலாரி கூறினார்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் எச்.1.பி விசாக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார். 65 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள ஒதுக்கீட்டை 1 லட்சத்து 95 ஆயிரமாக உயர்த்தவேண்டும். விசா விண்ணப்பங்கள்  தள்ளுபடி செய்யப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.

இந்த விவாதத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும், முதல்வர் ஜெயலலிதா ஹிலாரியிடம் பேசினார். இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், இலங்கை தமிழர்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பது குறித்தும், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வாழ்வதற்கு முடியாத நிலை குறித்தும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். இந்த உணர்வை பகிர்ந்து ஏற்றுக்கொண்ட ஹிலாரி கிளிண்டன், இலங்கை தமிழர்களின் முகாம்களில் இருந்து  விரைவில் சொந்த வீடுகளுக்கு திரும்ப அமெரிக்க அரசு நுட்பமான - ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான தமிழக அரசின் முன்னோடி திட்டங்களை அறிய அமெரிக்க குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் பெரும் சாதனைகளை அறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்கா வருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நடைபெற்றது. அமெரிக்கக் குழுவில் துணை அமைச்சர் பாப் பிளேக், உலக பெண்கள் விவகாரத்திற்கான தூதர் மெலன்வெர்வீர், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பீட்டர் பர்லேக், சென்னை - அமெரிக்க துணை தூதரகத்தின் ஆண்ட்ரூ டீ சிம்கின், அமெரிக்க அமைச்சகத்தின் துணை தலைமை அலுவலர் ஹியுமா ஆபிதீன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

 

படியில் ஏறிவந்த ஹிலாரி கிளிண்டன்

 

நேற்று சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன் கோட்டையில் ஜெயலலிதாவை சந்திக்க வந்தபோது அவரை பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயின் வாசலில் வரவேற்று லிஃப்ட் மூலம் செல்ல அழைத்தபோது ஹிலாரி கிளிண்டன் படிக்கட்டு வழியாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்தார்.

அவரை முதல்வர் ஜெயலலிதா வாசல் அருகே வந்து வரவேற்றார். இந்த சந்திப்பின்போது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் தேவந்திரநாத் சாராங்கி மற்றும் அமெரிக்கா தூதரக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்