முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் மகளுக்கு அரசு வேலை

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூலை.22 - கடந்த 2008 ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் விஜய் சலஸ்கார் பலியானார். இவரது மகளுக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அரசு வேலை கொடுத்திருக்கிறது மகராஷ்டிரா மாநில அரசு. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தலையீட்டின் பேரில் இந்த வேலை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதியன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் புகுந்து அதிரடியாக பல்வேறு இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். தாஜ் ஓட்டல், ஒபேரா ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 168 பேர் அப்போது பலியானார்கள். 

பின்னர் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்ததில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரே ஒரு தீவிரவாதி பிடிபட்டான். அவனை கைது செய்து விசாரணை நடந்து வந்தது. இறுதியில் அவனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் இன்னமும் அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 

மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது சில போலீஸ் அதிகாரிகளும் உயிரிழந்தனர். என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் விஜய்சலஸ்கர், தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்காரே மற்றும் போலீஸ் கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் இந்த தாக்குதல் சம்பவத்தில் முதலில் பலியானவர்கள். இவர்களில் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் விஜய்சலஸ்கரின் மகள் திவ்யா சலஸ்கருக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு மராட்டிய அரசு வேலை கொடுத்திருக்கிறது. 

உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தலையீட்டின் பேரில் இந்த வேலை அவருக்கு கொடுக்கப்பட்டதாம். சலஸ்கரின் மகள் திவ்யா, மும்பை விற்பனை வரி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வேலை கொடுப்பதாக ப. சிதம்பரம் வாக்களித்திருந்தாராம். மராட்டிய முதல்வருடன் இது குறித்து பேசுவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் சலஸ்கர் மகள் திவ்யாவுக்கு அரசு வேலை கொடுக்கப்பட்ட தகவல் சிதம்பரத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் டெல்லியில் கூறுகையில், 

இன்று காலையில்தான் மராட்டிய முதல்வர் என்னிடம் சொன்னார். திவ்யாவுக்கு விற்பனை வரி உதவி கமிஷனர் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டு விட்டது என்று சிதம்பரம் தெரிவித்தார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகே ஒரு இன்ஸ்பெக்டரின் மகளுக்கு அதுவும் நாட்டுக்காக உயிரிழந்த இன்ஸ்பெக்டரின் மகளுக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்