முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் ​- பொன்.ராதா கிருஷ்ணன்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச், - 3 - தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 13ம் தேதி வாக்கில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். எனவே, தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:​ தமிழக தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13​ந் தேதி நடக்க இருப்பதாக வந்துள்ள தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தமிழக மக்களின் மன உணர்வை புரிந்து கொள்ளாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14-​ந் தேதி அதாவது சித்திரை 1​ந் தேதி வர உள்ளது. தமிழக அரசு தமிழ் புத்தாண்டு தினத்தை தை 1-​ந் தேதிக்கு அரசின் அறிக்கை மூலம் மாற்றி இருந்தாலும் இன்றும் தமிழக மக்கள் சித்திரை ஒன்றையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.

 எனவே தமிழ் புத்தாண்டிற்கான முன் தயாரிப்புகள் சில நாட்களுக்கு முன்பே துவக்குவார்கள். தமிழக மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட இந்த புத்தாண்டிற்காக வீடுகளை தயார்படுத்தவும் வழி பாட்டுத்தலங்களை தயார் படுத்துவதிலும் மும்முரமாக இருக்கும் ஏப்ரல் 13​ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் சித்திரை விழாவை சீர்குலைக்கும் செயல் என்று கருதுகிறேன். தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி ஏப்ரல் 13-​ந் தேதி நடக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13​ந் தேதி வைத்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தை ஒருமாத காலம் காக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது. இந்த கால இடைவெளி தவறுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்பை உருவாக்கும். தேர்தல் பிரசார ஒலி பெருக்கிகளும் பிரச்சனை தரும்,  மாணவர்களின் கவனத்தை படிப்பில் இருந்து திசை திருப்பும். மேலும் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை அது மிகவும் பாதிக்கும் என்பதையும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையை மாற்றி மே மாதத்தில் தேர்தல் நடக்கும் வகையில் அட்டவணையை மாற்றி அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்