முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய சங்கத் தேர்தலை மீண்டும் நடத்த தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.22 - தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற விவசாய சங்க தேர்தலை ரத்து செய்து விட்டு மீண்டும் மறு தேர்தல் நடத்த ஜெயலலிதா ஆணையிடுமாறு அ.தி.மு.க. விவசாய அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜெயலலிதா ஆணைக்கிணங்க அ.தி.மு.க. விவசாய பிரிவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. விவசாயப் பிரிவுத் தலைவர் துரை. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.  விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் திருச்செங்கோடு டி.கே. கமலநாதன் வரவேற்புரை ஆற்றினார். 

கூட்டத்தில் விவசாயப் பிரிவு இணைச் செயலாளர்கள் மதுரை வழக்கறிஞர் பெ. சீத்தாராமன், கே. கர்ணன், விவசாயப் பிரிவு துணைச் செயலாளர்கள் ஏ.பி.சி. கணேசமூர்த்தி, திருத்தணி வி. சுப்ரமணியன், எம். பாரதியார், எஸ்.பி. ஆனைக்குட்டி பாண்டியன், விவசாயப் பிரிவு பொருளாளர் ஏழூர்பட்டி கே. தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயப் பிரிவுச் செயலாளர் சிவசாமி,  அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், அமைப்புச் செயலாளர் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைப்புச் செயலாளர் ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத், எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆதிராஜாராம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்ஆர். கமலகண்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிந் ஆணைக்கிணங்க அ.தி.மு.க. விவசாயப்பிரிவு மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர்  தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதாவை மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கும், அதற்காக அரும்பாடுபட்ட  தொண்டர்களுக்கும் இக் கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவிக்கின்றது. 

தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முதல் முறையாக சுதந்திரத்திற்குப் பிறகு, அதாவது மேட்டூர் அணை 1925 முதல் 1934ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1934ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் முறையாக காவேரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்கு அணையில் தண்ணீர் இருப்பினை கருத்தில் கொண்டு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடுவது அரசின் விதிமுறையாகும். 

தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா காவேரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க ஜூன் 6ம் தேதி அன்றே மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிப்பு செய்து தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டார். விவசாயிகள் வாழ்வில் விளக்கேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் அணி நன்றி தெரிவிக்கிறது. 

தமிழகத்திலுள்ள 75 லட்சம் சிறு குறு விவசாயிகளின் வாழ்வில் வளம் பெறவும், வருமானத்தை பெருக்கவும், விவசாய உற்பத்தியை பெருக்கவும் பண்ணை சார் சிறப்புத் திட்டத்தை அறிவித்த தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கின்றது. 

கடந்த 2006 முதல் 2011 வரை மக்கள் விரோத ஆட்சி நடத்திய விவசாயிகளின் துரோகி மைனாரிட்டி தி.மு.க. அரசின் கருணாநிதியால் பாதிக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு, தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி நிலுவைத் தொகையாக இருந்த 49 கோடியே 65 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்கிய ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கின்றது. 

அ.தி.மு.க.தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றான கறவை மாடுகள், ஆடுகள் வழங்கி நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுத்த தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இக் கூட்டம் நன்றி தெரிவிக்கின்றது. 

மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தி.மு.க. ரவுடிகளால் அபகரித்த நிலங்களை கையகப்படுத்தி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கின்றது. 

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வினரை வெற்றி பெறச் செய்ய,  விவசாயப் பிரிவு நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டுமென இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் நடுத்தர, ஏழை எளிய குடும்பங்களுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் தரமான அரிசி 20 கிலோவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தரமான அரிசி 35 கிலோவும் இலவசமாக வழங்கிய அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளர்  தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கின்றது. 

இலங்கை தமிழர்களை கொடூரமாகக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளி என அறிவிப்பு செய்து இலங்கைத் தமிழர்கள் முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்புடன் வாழவும் இந்தியா உதவ வேண்டும் எனவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடு சபையில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழ் நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு  விவசாயப் பிரிவின் சார்பாக நன்றி தெரிவிக்கின்றது. 

மைனாரிட்டி தி.மு.க. அரசில் 1 கிலோ தேயிலைக்கு ரூபாய். 6 என விலை குறைத்து கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆட்சிப் பதவி ஏற்றவுடன் தேயிலை 1 கிலோவுக்கு ரூபாய். 2 உயர்த்திக் கொடுத்த ஜெயலலிதாவுக்கு இக் கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. 

கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து கொப்பரை கிலோ 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வெளி மார்க்கொட்டில் 68 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் அனைத்து அரசு கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டன. இதை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த விவசாய சங்கத் தேர்தலை ரத்து செய்து மீண்டும் மறு தேர்தலை நடத்த ஆணையிடுமாறு ஜெயலலிதாவை பணிவுடன் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட இறுதியில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் பி. செளந்தரராஜன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்