முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேருந்து கவிழ்ந்து 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், ஜூலை.22 - திண்டுக்கல் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் நாகராஜன் நேரில் வந்து ஆறுதல் கூறியதோடு தேவையான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆடலூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று மாலை ஒரு அரசுப்பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தினை திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்தார். மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த கணேசன் கண்டக்டராக இருந்தார். மாலை நேரம் என்பதால் கூலி வேலைக்கு சென்ற ஏராளமான தொழிலாளர்கள் திமுதிமுவென அந்த பேருந்தில் ஏறினர். 60 நபர்கள் அமர வேண்டிய பேருந்தில் 125க்கும் மேற்பட்டோர் ஏறினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சிலர் பேருந்தின் மேற்கூரையிலும் ஏறி பிரயாணம் செய்தனர். இதனால் அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு ஊர்ந்து வந்த பேருந்து தருமத்துப்பட்டி செக்போஸ்ட் அருகே திடீரென பிரேக் பிடிக்காமல் போனது. இதனால் அதன் கட்டுப்பாட்டை இழந்து செக்போஸ்டை இடித்துத் தள்ளி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனால் பேருந்தில் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர்  நாகராஜன் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். மருத்துவமனையில் அனைத்து டாக்டர்களையும் வரவழைத்து காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளித்து வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட்டார். வேனில் இருந்து இறங்க முடியாமல் இருந்தவர்களை கலெக்டரே இறக்கி பெட்டில் படுக்க வைத்தார். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருந்து, படுக்கை வசதி, மருத்துவர் வசதி, உணவு வசதி போன்றவற்றையும் மாவட்ட கலெக்டர் ஏற்படுத்திக் கொடுத்தார். 

விபத்தில் சிறுகாயம் அடைந்த பேருந்து டிரைவரை அளவுக்கு அதிகமாக ஏன் பயணிகளை ஏற்றினாய்? என கண்டித்தார். மேலும் திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக மேலாளரையும் உடனடியாக வரவழைத்து அதுகுறித்து விசாரணை நடத்தினார். விபத்தில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மாவட்ட கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை கண்டு வேதனையிலும் மனம் மகிழ்ந்தனர். தாங்கள் உயிர் பிழைத்துக் கொள்வோம் எனவும் நம்பிக்கை அடைந்தனர். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் காயமடைந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மருத்துவமனையில் அதிக அளவில் கூடினர். மேலும் மாவட்ட கலெக்டருக்கு தங்கள் நன்றியையும் தரிவித்துக் கொண்டனர்.

இச்சம்பவத்தால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்