முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதிக்கு தொலைத் தொடர்பு ஊழியர்கள் போர்க்கொடி

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை ஜூலை-22 - தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் தொலைத்தொடர்பு துறைக்கு இழப்பீடு செய்த தொகை ரூ.440 கோடியை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடமிருந்து அரசு வசூல் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம் நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளத்தினர் பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு முறைகேடாக வழங்கிய தொலைபேசி இணைப்புகள் மூலம் தொலைத்தொடர்பு துறைக்கு ஏற்பட்டுள்ள  ரூ.440 கோடி இழப்பை வசூல் செய்யவேண்டும், முறைகேடாக இணைப்புகள் வழங்கிய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும், பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சங்கங்களுக்கும் அங்கீகாரம் வழங்கவேண்டும், கட்டாய ஓய்வு திட்டத்தை கைவிடவேண்டும், பி.எஸ்.என்.எல். பணிகளை வேறு நிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்பாட்டத்தை தொடர்ந்து சங்க செயலாளர் சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சென்னையில் 24371515 என்ற இணைப்பில் ஐ.எஸ்.டி. தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பு 323 இணைப்புகளாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஆகிய 3மாதங்களில் மட்டும் இந்த தொலைபேசி இணைப்புகளின் மூலம் 629.5 யூனிட் பேசப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டிற்கு குறைந்தபட்ச கட்டணம் 70பைசா வைத்துக்கொண்டால்கூட அவர் 3மாதங்களில் சுமார் ரூ.440 கோடி தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு இழப்பீடுசெய்துள்ளார். அந்த இணைப்புகள் அனைத்தும் அவரது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் தற்போது ரூ.1500கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதில் ஒரு தனிநபர் மட்டும் 440 கோடி இழப்பீடு செய்துள்ளார். அந்த பணத்தை அவரிடமிருந்து வசூல் செய்யவேண்டும், முறைகேடாக இணைப்பு வழங்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். பி.எஸ்.என்.எல். கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டது. இதனை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்