முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது ஆவாரா?

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி--ஜூலை.23 - திருச்சியில் ரூ.30கோடி மதிப்புள்ள ஹோட்டலை அபகரித்து விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.என்நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன், அமைச்சரின் தம்பி ராமஜெயம் ஆகியோர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ள நிலையில் ஹோட்டல் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசிய சிடி ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் நேரு கைதாக கூடும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்களில் பல்வேறு தி.மு.கவினர் தொடந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு அவரது தம்பியும் தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான மு.அன்பழகன் ஆகிய மூன்று பேர்கள் மீது ரூபாய் 30 கோடி மதிப்பிலான திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு ஹோட்டலை அபகரித்ததாக நாமக்கலைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் திருச்சி மாநகரில் போலீசில் புகார் கொடுத்தார். 

இது குறித்து திருச்சி மாநகர போலிஸ் கமிஷனர் மாசாணமுத்து உத்திரவின் பேரில் டாக்டர்.கதிர்வேல் கொடுத்த புகாருடன் அதற்கான ஆதாரங்களையும் வாங்கி போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஏற்கெனவே டாக்டர்.கதிர்வேல் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது.

கடந்த 2005 ஆம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காஞ்சனா பிளாசா ஹோட்டலை 30 கோடி மதிப்பீட்டில் நான் கிரைய ஒப்பந்தம் செய்தேன். அதை தொடர்ந்து ஹோட்டலை நானே நிர்வாகித்து வந்தேன். இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு திருச்சி திமுக மாநகர செயலாளர் அன்பழகன் தலைமையில் அடியாட்கள் ஆயுதங்களுடன் வந்து  என்னை மிரட்டி ஹோட்டலை விட்டு அனுப்பி விட்டனர். மேலும், போலி ஆவணங்கள் தயாரித்து அந்த ஹோட்டலையும் அபகரித்து கொண்டனர். இப் பிரச்சினையில் திருச்சியில் பணியாற்றிய ஒரு போலீஸ் அதிகாரி தொடர்பு இருக்கிறது. எனவே, நான்கு பேர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த எனது ஹோட்டலை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதனிடையே முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவில் ஏற்கெனவே இது போன்று ஒரு புகாரை டாக்டர்.கதிர்வேல் திருச்சி போலீசில் கொடுத்திருந்தார். அதனை விசாரித்த காவல் துறையினர் அந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என்று புகாரை முடிவுக்கு வந்தனர். மீண்டும் அதே குற்றச்சாட்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய் புகார் எனவே எங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கே.என்.நேரு, அன்பழகன் ஆகியோர் கூறியுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க கே.என்.நேரு, தொழிலதிபர் கே.என்.ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் ஆகியோர் மீது 

கூறப்பட்டுள்ள ஹோட்டல் அபகரிப்பு புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கினர்.

கடந்த 2007ல் திருச்சி கன்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், டாக்டர் கதிர்வேலுடன் செல் போனில் பேசியது தொடர்பான மூன்று சி.டிக்களை புகார் மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சிடியில் டாக்டர் கதிர்வேலுக்கு சொந்தமான ஹோட்டலை முன்னாள் அமைச்சர் நேருவும் அவரது தம்பி ராமஜெயமும் வாங்க விரும்புவதாகவும் எனவே, அவர்கள் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு ஹோட்டலை விட்டு விடவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் பேசியுள்ளதாக அந்த சிடியில் பதிவானதாக கூறப்படுகிறுது. அந்த சிடியை ஆய்வு செய்த திருச்சி மாநகர போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனின் குரல் தானா என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு போலீசாரை தயார் செய்து இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனிடம் செல் போனில் பேச வைத்து அந்த பேச்சை வேறு ஒரு சிடியில் பதிவு செய்தனர். பின்னர் இரண்டு சிடிக்களையும் ஒப்பிட்டு பார்த்த் போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் குரல்தான் அது என்பதை உறுதி செய்து கொண்டனர். தற்போது இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சென்னை வீராபுரத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பணி புரிந்து வருகிறார். 

டி.எஸ்.பி சுவாமிநாதனை திருச்சி போலீசார் திருச்சி வரவழைத்து அவரிடம் போலீஸ் கமிஷனர் மாசாணமுத்து, துணை போலீஸ் கமிஷனர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையில் சிடி தொடர்பாகவும், ஹோட்டல் அபகரிப்பு விவகாரம் தொடர்பகாவும் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் விசாரணை சூடு பிடித்துள்ளது. எந்த நேரத்திலும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, துணைமேயர் அன்பழகன் ஆகியோரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்யக்கூடும் என்று போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.மேலும், ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது. ஹோட்டல் அபகரிப்பு தொடர்பாக மூன்று பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரகசியமாக வைத்துக்கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்