மனைவி-3 குழந்தைகள் கல்லை தூக்கி போட்டு கொலை

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
4 child death slm

 

அரூர் மார்ச்.3 - அருகேயுள்ள டி.புதூரில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் 3 குழந்தைகளின் மீது கல்லை தூக்கி போட்டு கூலித்தொழிலாளி கொடூரமான முறையில் கொலை செய்தது அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள டி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(28) கூலி தொழிலாளியான இவரது மனைவி சேமலதா(26) இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சுஜித்ரா(6) என்ற பெண் குழந்தை ஜெகன்(4) அன்பழகன்(2) என்கிற ஆண் குழந்தைகளும் இருந்தனர் 

கடந்த சில மாதமாக மனைவியின் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து ஊர் பெரியவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் பேசியுள்ளனர். 

இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையில் சுரேஷ் மண்ணெண்ணையை குடித்துள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள அரூர்  மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் சிகிச்சை பெற்று  நேற்று முன் தினம் வீடு திரும்பியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து சம்பவ தினத்தன்று சேமலதா மற்றும் குழந்தைகள் சாப்பாடு முடித்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சுரேஷ் திடிரென எழுந்து தூங்கி கொண்டிருந்த 3 குழந்தைகள் மீதும் கல்லை தூக்கிபோட்டு கொலை செய்துள்ளார். 

குழந்தைகளின் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளனர் ஆனாலும் சுரேசுக்கு ஆத்திரம் தீராமல் மனைவியின் மீதும் கல்லை தூக்கிபோட்டுள்ளார். இதில் சேமலதா படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் சத்தம்போட்டுள்ளார். 

சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். பின்னர்  ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளனர். வண்டியில் கொண்டு செல்லும் வழியிலேயே சேமலதா பரிதாபமாக இறந்தார் இதில் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் தான் மாட்டிகொள்வோம் என்ற பயத்தில் வீட்டிலிருந்து ரோட்டுக்கு ஓடியுள்ளார். எதிரே வந்த லாரி மீது தானகவே பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டார். இவரது இரண்டு கால்களும் துண்டானது. இதனைதொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் தனபாலுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தனபால் அரூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு அரூர் மதுவிலக்கு டி.எஸ்.பி. பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து இறந்த குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து அரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு 3 குழந்தைகளையும் மனைவியையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் இப்பகுதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: