முக்கிய செய்திகள்

ஏர்டெல் செல்போன் அழைப்பு கட்டணங்கள் உயர்வு

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 23 - செல்போன் அழைப்பு கட்டணங்களை பாரதி ஏர்டெல் நிறுவனம் 20 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதில் ப்ரீபெய்டு கட்டணங்களும் அடங்கும். இந்தியா உள்பட 19 நாடுகளில் இயங்கிவரும் பாரதி ஏர்டெல் நிறுவனம் உலகிலேயே வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 5 வது மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் புதுடெல்லி, ஆந்திரபிரதேசம், உத்தரபிரதேசம், உள்ளிட்ட 6 முக்கிய வட்டங்களில் பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது செல்போன் அழைப்பு கட்டணங்களை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ப்ரீபெய்டு கட்டணங்களும் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தற்போது ஒரு வினாடிக்கு ஒரு பைசாவாக இருக்கும் கட்டணம் 1.2 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து இதர தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களது செல்போன் அழைப்புக் கட்டணங்களை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு மும்பை பங்குச் சந்தையில் நேற்று ரூ. 411 ஆக இருந்தது. ஏர்டெல் நிறுவனத்திற்கு 16 கோடியே 92 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்று செல்போன் கம்பெனிகள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது. உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான செல்போன் உபயோகிப்பாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.  தனது நிதிச் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்காக செல்போன் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கடந்த மாதம்  பாரதி ஏர்டெல் நிறுவனம் கூறியிருந்த நிலையில் இப்போது இந்த 20 சதவீத கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. இப்போது செல்போனுக்கு ரூ. 100 செலவு செய்பவர்கள் இனி ரூ. 120 செலவு செய்ய வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: