முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் நில அபகரிப்பு அதிகம்: ஜி.ராமகிருஷ்ணன்

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 23 - சுதந்திரத்துக்குப்பிறகு எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் நில அபகரிப்பு அதிகமாக இருந்தது என ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக சமூக பொருளாதார வளர்ச்சி குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சில கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் தயார் செய்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்கி இருக்கிறோம். தி.மு.க. ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி அகில இந்திய வளர்ச்சி விகிதத்தை விட குறைவாக இருந்தது. வேளாண் உற்பத்தி சரிந்து வருகிறது. எனவே வேளாண்மை துறையை மீட்டெடுக்க வேண்டும். வேளாண் உற்பத்தியை பெருக்க மண்வளம், பாசன வசதிகளை அதிகரிக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் வசதி அளிக்க வேண்டும்.   நெல் குவிண்டாலுக்கு ரூ.1,500, கரும்பு டன்னுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும். 

மாநிலம் முழுவதும் 25 லட்சம் பேர் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தனி குழு அமைத்து புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் பல வெளிநாட்டு கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த நிறுவனங்களுக்கு அரசு அளித்த சலுகைகள் என்ன? இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்ற விவரங்களை  சட்டப்பேரவையில் வெளிப்படையாகவும், அனைத்து விவரங்களுடனும்  விவாதிக்க அரசு  தகவல்களை வெளியிட வேண்டும். 

வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் தொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்க்க தொழிற்சங்க அங்கீகார சட்டம் கொண்டு வர வேண்டும். தனியார் பள்ளி மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண மற்றும் நன்கொடை கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். முத்துக்குமரன் பரிந்துரைகளை அமலாக்க வேண்டும். 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். 

மகளிர் ஆணையம் அதிகாரத்தோடு கூடிய ஆணையமாக செயல்பட வேண்டும். நீதித்துறை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். 

கடந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தான்  சுதந்திரத்துக்குப்பிறகு இந்தியாவில் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு நிலஅபகரிப்பு நடந்துள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக எடுக்க கூடிய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு விசாரித்து உத்தரவிட்டபிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பெற்றதும் இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட 7 அரசு ஆணைகள் வெளியிட்டது. மற்றும் அரசு கேபிள் டி.வி. நடத்த நடவடிக்கை எடுத்தது ஆகியவற்றுக்கு எங்களது பாராட்டுகளை தெரிவித்து உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் மாநில செயலாளர் என்.வரதராஜன், வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்