முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் காவலில் பொட்டு சுரேஷ் - தளபதி

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.23 - நில மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் உள்பட 4 பேரும் நேற்று மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலத்தை திமுகவினரிடம் இருந்து மீட்டுத்தருவேன் என்று உறுதி அளித்தார். அதன் படி ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள நில மோசடி புகார்களை விசாரிக்க தனப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். இந்த தனிப்பிரிவு தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்ளிடம் புகார்களை வாங்கி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த வருகிறது. இதில் முதற்கட்டமாக மதுரை திமுக பிரமுகரும், முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவருமான  அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏராளமான திமுகவினர் நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள செங்குளத்தைச் சேர்ந்த சிவனாண்டி அவரது மனைவி பாப்பா ஆகியோர்  மதுரை புறநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம்ஏ ஒரு புகார் அளித்தனர். அதில் தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை திமுக மாவட்ட செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, திருமங்கலம்  ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி.சந்திரசேகரன்,திருப்பரங்குன்றம் முன்னாள் நகர திமுக செயலாளர் கிருஷ்ணபாண்டி ஆகியோர் மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கி அபகரித்து விட்டதாக கூறியிருந்தனர்.  மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் புகாரில் உண்மை இருப்பதாக கூறி  4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, கொடிசந்திரசேகரன், திருப்பரங்குன்றம் முன்னாள் நகர திமுக செயலாளர் கிருஷ்ணபாண்டி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் முத்துக்குமரன்  முன்  ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை  சிறையில் அடைத்தனர். 

   இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி மதுரை ஜே.எம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மாலை நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி, மொட்டு சுரேஷ், கொடி.சந்திரசேகரன், கிருஷ்ணபாண்டி 4 பேரும் பாளையங்கோட்டை சிறையிலிருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அரசு வக்கீலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்களும் வாதிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்