முக்கிய செய்திகள்

இலவச கலர் டி.வி. கொடுக்காதே - தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன் தடை

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      தமிழகம்
ECI-

 

சென்னை, பிப்.3 - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் விழிப்புணர்வுடன் இருந்து கண்காணிக்காகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. கொடுக்கக் கூடாது; தேர்தல் கமிஷன் உத்தரவு

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச கலர் டி.வி. வழங்கப்படும் என்று கடந்த 2006​ம் ஆண்டு தேர்தலின் போது தி.மு.க. அறிவித்தது. அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இலவச கலர் டி.வி. பெட்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.  இலவச கலர் டி.வி. வழங்குகிறேன் என்று ஏராளமான அரசு நிதி உதவியை இலவச திட்டங்களுக்கு தமிழக அரசு திருப்பியது. இதை மத்திய கணக்கு தணிக்கை குழுவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.  

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் வண்ண இலவச தொலைக் காட்சி பெட்டிகள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் என்ன செய்வது என்று முன்கூட்டியே டோக்கன் கொடுத்து விட்டு தேர்தல் தேதி அறிவித்த பிறகும் டி.வி. வழங்கலாம் என்ற தி.மு.க.வின் எண்ணத்தில் மண் விழுந்தது. பல இடங்களில் கலர் டி.வி. வழங்கப்படுவதற்கு முன்னோட்டமாக டோக்கன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் முடியும் வரை வண்ண இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கக் கூடாது என்று தமிழக தேர்தல் கமிஷனர் உத்தர விட்டுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:​ தமிழ்நாட்டில் தேர்தல் நடவடிக்கைகள் நடந்து முடியும் வரை இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் வினியோகம் செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எந்த அதிகாரியாவது இலவச கலர் டி.வி. வழங்குவதாக தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: